உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, August 19, 2010

வடமாநிலச் சுற்றுலா - 7


காலை 6.00 மணிக்கு டெம்போ தயாராக நின்றது எங்களுடன் இன்னும் நான்கு நபர்கள் அதில் பயணிகளாக வந்தார்கள் அதில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி மற்ற இருவர் சேலத்தைச் சார்ந்த தமிழர்கள்.

எங்களின் டெம்போ ஜெய்பூரை நோக்கி புறப்பட்டது டெல்லி ஜெய்பூரின் தேசிய நெடுஞ்சாலையில் பலவிதமான தொழிற்சாலைகள் இருந்தன.

எங்கள் குழந்தைகளுடன் நேபாள் இளசுகளும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள்.

வரும் வழியில் காலை சிற்றுண்டிற்காக நிறுத்தப்பட்டு உணவருந்தினோம்.

சூரியபகவான் கொஞ்சம்கூட எங்கள் மீது இரக்கம் காட்டவில்லை ஏசி வசதி இருந்ததினால் பயணத்தை இரசிக்க முடிந்தது.

ஜெய்பூரை நெருங்க, நெருங்க விளை நிலங்கள் அதிகமாக தென்பட்டது ஆனால் நிலங்கள் தண்ணீருக்காக வானத்தை நோக்கி கையேந்தி நின்றது.
மழையை நம்பித்தான் ஜெய்பூரின் விவசாயிகள் இருக்கிறார்கள்.நிலத்தடி நீரெல்லாம் அங்கு ஆயிரம் அடிகளை தாண்டி இருக்கிறதாம் அதனால் ஜெய்பூரில் நிலங்கள் மிகமலிவு (ரியல் எஸ்டேட் பிஸினஸ் காரர்களுக்கு இது டிப்ஸ் வாங்குவதற்கு ஆள்கிடைப்பார்களா? என்பதை யோசனை செய்துக்கொள்ளுங்கள்)

நம்ம ஊர்களில் மாட்டு வண்டியைப் பார்த்திருப்போம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டக வண்டியை அதிகம் காணமுடிகிறது.அதேப் போன்று ஜீப்கள் அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள்.மலை,வயல்,பாலை இவைகளில் பயணம் செய்வதற்கு இளகுவாக இருக்கிறாதாம்.

ஜெய்பூரின் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தோம் சூரியன் வெட்கப்பட்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டது ஆனால் மேகம் எங்களை கொடைவிரித்து வரவேற்றது.ராஜஸ்தான் மாநிலம் எங்களை அன்புடன் அழைத்தது.

ஜெய்பூர் எல்லையில் ஆடம்பரமான அரண்மனை வடிவில் ரிஸோர்ட்கள் இருந்தன.அதைப்பார்த்ததும் அங்கு தங்கவேண்டும் என ஆசைவந்தது ஆனால் ஜெய்பூர் காட்கேட்டில் ஹோட்டல் புக் செய்துவிட்டபடியால் பார்வையால் அந்த ரிஸோர்ட்டில் தங்கிக் கொண்டேன்.

மன்னர் பீம்சிங்கின் அரண்மனைக்குள் செல்வதற்கு எங்களை டெம்போவிலிருந்து ஜீப்பிற்கு மாற்றினார்கள்.மலையின் மேல்புறத்தில் மன்னரின் அரண்மனை இருக்கிறது.நாம் கீழிருந்து அதைப் பார்ப்பதற்கே அந்த பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.

ஜீப்பில் எங்களை ஏற்றும்போதே கைடும் எங்களுடன் ஏறிக்கொண்டார் எல்லா வகையிலும் ஏமாற்ற துடிக்கும் ஆக்ரா,டெல்லி மக்களுக்கு மத்தியில் ஜெய்பூர் வாசிகள் பலகுவதற்கு வியாபார நோக்கமில்லாத மனிதர்களாக ஆங்காங்கே காணப்பட்டார்கள்.

மன்னர் பீம்சிங் அரண்மனைக்குள் எங்களின் ஜீப் திணறி,திணறி ஏறியது வாகனமே இவ்வளவு திணறி ஏறும்போது அந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த சிப்பாய்கள் இந்த மன்னர்களுக்காக எத்தனைமுறை ஏறி இறங்கிருப்பார்கள்.

அரண்மனை வாசலில் குல்பி வியாபாரம் சூடாக நடந்தது அதை வாங்கி சுவைத்து நாங்கள் குளிர்ந்தோம்.அந்த அரண்மனையினுள் கண்ணாடி மஹால் இருக்கிறது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுக் கொண்டு கேமராவில் கண்ணாடியை நோக்கி கிளிக் செய்தால் பிரேம் போட்டது போன்று நம் தோற்றம் விழுகிறது...இதோ நீங்கள் காண்பது நேபால் தம்பதி...

இந்த அரண்மனையில் நமது புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இன்றைய நடிகர்கள் என பலரின் சினிமா சூட்டிங் இங்கு நடந்ததாம், நடக்குமாம்.

மன்னர் பீம்சிங்கிற்கு பதினெட்டு மனைவியாம் அந்த 18 மனைவிகளுக்கு 18 அறைகளை தனித்தனியே அமைத்து அந்த அறைகளுக்கு செல்லக்கூடிய வழிகளையும் 18 அமைத்துள்ளார்.மன்னர் எந்த மனைவியுடன் இருக்கிறார் என்பது எந்த மனைவிக்கும் தெரியாதாம்.(மனுசன் பலே கில்லாடிதான்)

அந்த அரண்மனையில் பணிப்புரிபவர்களுக்கு உணவு புகைப்படத்தில் காணும் இந்த சட்டியில்தான் தினம் சமைப்பார்களாம்.

இதோ நீங்கள் பார்க்கும் இந்தப் புகைப்படம் மன்னரின் கஜானா பெட்டி இதில்தான் தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் என்று வகைப்பிரித்து வைத்துள்ளாராம்.

மன்னர் பீம்சிங் கட்டிக்கலையில் மிகுந்த ஆர்வங் கொண்டவர் மட்டுமல்ல மனித ஒன்றுமையை வேண்டி பலமாக சிந்தித்தவர்.அவர் சிந்தனையின் உருவம்தான் இன்றைய ஜெய்பூர் வணிக நகரம்.இந்த வணிக நகரத்திற்கு நான்கு முக்கிய வாயில்களை அமைத்து அந்த வாயிலுக்கு மிகப்பெரிய கதவலையும் போட்டிருக்கிறார்.அதுமட்டுமல்ல அந்த வணிக நகரத்தில் பள்ளிவாசல்,கோயில் கட்டி இருக்கிறார் கோயில் இருக்கும் தெருவிற்கு இஸ்லாமிய பெயரையும் பள்ளிவாசல் உள்ள தெருவிற்கு இந்துப் பெயரையும் சூட்டி மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார் ஜெய்பூரில் வெற்றியும் பெற்றுள்ளார் இது இன்றளவும் இருக்கிறது.

ஜெய்பூர் நகரத்தை ஆங்கிலத்தில் "பிங்க் சிட்டி" என்றழைப்பார்கள்.அந்த நகரம் முழுவதும் ஒரே வண்ணத்தில் ஒரே அளவில் கட்டிடங்களும் தெருக்களும் அமைத்திருக்கிறார் மன்னர் பீம்சிங்.

மக்கள் நெரிசல் இந்த வணிக நகரத்தில் அதிகமாக இருப்பதினால் அவர்களால் தூய்மைக்கு துணை நிற்க முடியவில்லை.தூய்மையைப் பற்றி விழிப்புணர்வு செய்வதற்கு போதிய அவகாசம் அந்த மாநில அரசினர்களுக்கு இல்லாமல் இருப்பது வருத்தமடையச் செய்கிறது.மன்னர் பீம்சிங் மட்டும் இந்த நிலையைக் கண்டால் தொதித் தெழுந்துவிடுவார்.
மன்னர் பீம்சிங்கின் அரண்மனையில் சுரங்கப்பாதை இன்னும் இருக்கிறது இந்த சுரங்கப்பாதை அரண்மனையிலிருந்து மன்னர் அவசரக்காலத்தில் யாருக்கும் தெரியாமல் மலைப்பகுதிக்குள் சென்று விடுவதற்கு மக்களுடன் கலந்துவிடுவதற்குகாக அமைத்துள்ளாராம்.

மதியம் இரண்டு மணியை கடந்துவிட்டதினால் எங்களின் வயிறு உணவகத்தை தேடியது.மலையிலிருந்து இறங்கியதும் கைடு எங்களை தென்னிந்திய உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.சில தினங்களுக்கு பின் நம்மஊரு சாப்பாட்டை ருசித்து உண்பதற்கு செல்கின்றோம்...

உங்களுக்கும் இப்போ பசிக்கும்தானே அதனால் நீங்களும் சாப்பிடுங்க சந்திப்போம்...

7 comments:

சிம்மபாரதி said...

//அந்த அரண்மனையில் பணிப்புரிபவர்களுக்கு உணவு புகைப்படத்தில் காணும் இந்த சட்டியில்தான் தினம் சமைப்பார்களாம்.//

அவ்வளவு தானா!! நான் கூட அங்க போயும் நீங்க பிரியாணி செய்ய பாத்திரம் ரெடி பண்ணீட்டங்களோன்னு நெனச்சேன்...

சிம்மபாரதி

கிளியனூர் இஸ்மத் said...

//அங்க போயும் நீங்க பிரியாணி செய்ய பாத்திரம் ரெடி பண்ணீட்டங்களோன்னு நெனச்சேன்//

சிம்மபாரதி....உண்மைதான் நம்ம அமீரகப்பதிவர்களுக்கு இந்த பாத்திரத்தில் பிரியாணி சமைத்தால் போதுமானதாக இருக்குமான்னு யோசிச்சேன்....

Unknown said...

//மதியம் இரண்டு மணியை கடந்துவிட்டதினால் எங்களின் வயிறு உணவகத்தை தேடியது.மலையிலிருந்து இறங்கியதும் கைடு எங்களை தென்னிந்திய உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.சில தினங்களுக்கு பின் நம்மஊரு சாப்பாட்டை ருசித்து உண்பதற்கு செல்கின்றோம்...

உங்களுக்கும் இப்போ பசிக்கும்தானே அதனால் நீங்களும் சாப்பிடுங்க சந்திப்போம்//

நோன்பு நேரத்தில் என்ன குசும்பு? சாப்பாட்டு சட்டி, நம்ம ஊரு சாப்பாடு என்று....

கிளியனூர் இஸ்மத் said...

கதீம் அண்ணே...இப்தாருக்கு பிறகு போடவேண்டிய பதிவை காலையிலேயே போட்டதினால் வந்த குழப்பம்...

அப்துல்மாலிக் said...

//மன்னர் பீம்சிங்கிற்கு பதினெட்டு மனைவியாம் அந்த 18 மனைவிகளுக்கு 18 அறைகளை தனித்தனியே அமைத்து அந்த அறைகளுக்கு செல்லக்கூடிய வழிகளையும் 18 அமைத்துள்ளார்.மன்னர் எந்த மனைவியுடன் இருக்கிறார் என்பது எந்த மனைவிக்கும் தெரியாதாம்.(மனுசன் பலே கில்லாடிதான்)//

மன்னர்னாலே இப்படிதான் இருக்கோனும் என்று ஒரு சட்டம் வெச்சிருக்காங்க போல :):)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அருமையான கருத்துக்கள் கூறும் கட்டுரை.ஜெய்ப்பூர் போகணும்னு ஒரு ஆசை இருந்தது. அது இப்போ தீவிரமாயிடுச்சுங்ணா!

கிளியனூர் இஸ்மத் said...

அப்துல்மாலிக்,
கா.நா.சாந்தி லெட்சுமணன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....