உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, August 26, 2010

வடமாநிலச் சுற்றுலா - 9


மழைத்தூறல் அதிகமானது வாகனங்கள் வேகத்தை குறைத்துக் கொண்டன செல்லும் வழியெல்லாம் தரிசான விளைநிலங்களில் விழுந்த மழையின் நீரை தன் தேகத்தில் தாங்கியதுமே விழுங்கிக் கொண்டது மண். உணவுக்காக அலைந்த ஏழையைப்போல ராஜஸ்தானின் விளை நிலமும் மழைக்காக ஏங்கும் ஏழையாகவே இருக்கிறது.

கரும் மேகங்கள் எங்கே கலைந்து விடுமோ என்ற கவலை எனக்கு பெய்யட்டும் மழை பெய்யட்டும் எத்தனை ஏழைகள் இதற்காக ஏங்கினார்களோ பகலெல்லாம் தூங்கினார்களோ அவர்களுக்காக பெய்யட்டும். தண்ணீரின் தாகம் மனிதனுக்கு மட்டுமல்ல பூமிக்கும் இருக்கிறது பூமிக்குள்ளும் தண்ணீர் இருக்கிறது.

ஜெய்பூர் அஜ்மீரின் பிரதான சாலை மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது வாகனங்களுக்கு எந்த இடையூரும் இல்லாமல் இருவழிப் பாதையில் மூன்று பாத்திகளாய் பிரித்திருந்தார்கள் வாழ்க்கையைப் போல் வாகனங்களின் வேகமும் அதிகரித்துக் கொண்டிருந்தன.

அஜ்மீர் செல்லும் வழியில் கிரானைட் பாறைகளை அறுக்கும் தொழிற்சாலைகள் வரிசையாக நிறைந்திருந்தது பல மாநிலங்களுக்கு இங்கிருந்துதான் சலவைக் கற்கள் அனுப்பப்படுகிறது. இங்கு விலைக்குறைவு ஆனால் இங்கிருந்து எடுத்துச் செல்லும் வாகனத்திற்கான வாடகைதான் அதிகம். பணத்தைவிட பொருள்தேவை உடையவர்களுக்கு வாடகை ஒரு பொருட்டே அல்ல வாங்கிவிடுவார்கள்.

நாங்கள் அஜ்மீரை நெருங்கிக் கொண்டிருந்தோம் மழையின் வேகம் குறைந்துக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் பெய்த மழையினால் பலரைப்போல நாங்கள் மகிழ்ந்தோம். மனிதனுக்கு எதுவெல்லாம் சுகம் தருகிறதோ அதில் மனம் மகிழ்கிறது.

அஜ்மீர் என்றாலே மஹான் ஹஜ்ரத் கரீப் நவாஸ் என்றழைக்கப்படும் மஹான் கவாஜ் மொய்னுதீன் ஹஸன் சிஸ்ட்டி அவர்களின் புனித அடக்கஸ்தளமே அனைவரின் நினைவுக்குள் வரும்.

மதபேதமில்லாமல் இங்கு பிரார்த்தனைக்காக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகைப் புரிகிறார்கள். இன்னும் பல நாடுகளிலிருந்தும் அதாவது அமெரிக்கா ஆப்ரிக்கா ஐரோப்பா பாக்கிஸ்தான் ஈரான் பங்களாதேஷ் இலங்கை மலேசியா சிங்கப்பூர் பர்மா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வருகைப்புரிகிறார்கள்.

இந்த இடம் புனித பூமியாக பல நூற்றாண்டுகளுக்கு முன் மஹான் ஹஜ்ரத் கரீப் நவாஸ் அவர்களினால் மாறிப்போனது இந்திய இஸ்லாமிய வரலாற்றில் அஜ்மீருக்கு அன்றும் இன்றும் என்றும் நீங்காத இடம்.
இன்னும் தமிழகத்தில் இஸ்லாமிய கிராமங்களில் அஜ்மீரை சின்ன மக்கா என்றும் அழைக்கின்றார்கள்.

நாம் சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்போம் ஆனால் காலச்சூழ்நிலையினால் போகமலேயே காலம் கடத்திவிடுவோம் ஆனால் சில இடங்களுக்கு எந்த திட்டமும் இல்லாமல் நினைத்த நேரத்தில் சென்று வந்துவிடுவோம் அது நமக்கு ஆச்சிரியத்தை அளிக்கும் அப்படித்தான் அஜ்மீரின் பயணம் எனக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது.

மதினாவைக் கண்ட என்கண்கள் அஜ்மீரையும் கண்டு குளிர்ந்தது ரோஜாவின் வாசனையை அஜ்மீர் எல்லையில் நுகர்ந்தேன். மஹான்கள் என்றும் சம்பூரண மனிதர்கள் இவர்களால் மனித குலத்திற்கு விமோசனமேத் தவிர மோசமில்லை.

உலகில் எத்தனையோ தீர்க்கதரிசிகளும் மஹான்களும் தோன்றி மறைந்திருக்கிறார்கள் இன்னும் மஹான்கள் தோன்றிக் கொண்டும் நம்மிடையே வாழ்ந்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்றால் மனிதன் இன்னும் மனிதனாக வாழவில்லை இந்த மனிதச்சமுதாயம் இந்த மண்ணில் வாழும் வரையில் மஹான்கள் தோன்றிக் கொண்டுதானிருப்பார்கள்.

மஹான் கரீப் நவாஸ் அவர்களின் புனித தர்ஹா ஷரீப்பிற்குள் நுழைந்தோம். பாதுகாப்பு பலமாக இருந்தது. புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை இருந்தாலும் ஆவலில் சிலப்படங்களை எடுத்தேன். காலை நேரம் கூட்டம் இருந்த வண்ணமாகவே இருந்தது அந்த தர்ஹா மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது தர்ஹாவை ஒட்டியே பள்ளிவாசலும் இருக்கிறது. பல மாநிலத்தர்கள் நிறத்தார்கள் மொழியார்கள் கடலில் கலக்கும் பல ஆறுகளைப்போல பல மனிதர்களும் இங்கு சங்கமிக்கிறார்கள்.

எங்களை வரவேற்று அழைத்து சென்றனர் தர்ஹாவின் கமிட்டியினர். அவர்களின் வழிகாட்டுதலில் இலகுவாக எங்களின் பிரார்த்தனையை முடித்துக் கொண்டோம்.

நன்றி சொன்னேன் இறைவனுக்கு நன்றி சொன்னேன். தர்ஹாவைச் சுற்றி கடைகள் அதைச்சுற்றி பலரின் நடைகள் நாகூரை நினைவுப் படுத்தியது. தர்ஹா வாயிலில் ஏழைகள் இங்கு காசு கேட்டவர்களை விட உணவு கேட்டவர்கள் அதிகம். இப்படி ஒரு புனித இடத்திற்கு வருபவர்களால் பல ஏழைகளின் வயிறு நிறைவதற்கு வாய்பளிக்கிறது இந்த மஹான்களின் தர்ஹாக்கள் இன்னும் பல புனித ஸ்தளங்கள்.

சில மணிநேரங்களை அங்கு கழித்துவிட்டு மீண்டும் ஜெய்பூர் செல்வதற்கு ஆயத்தமானோம்.

மனம் நிறைந்திருந்தது வானமும் தெளிந்திருந்தது மீண்டும் வாழ்நாளில் இன்னொருமுறை வருவோம் என மனம் சொன்னது புறப்பட்டோம் ஜெய்பூர் இளம் சிவப்பு நகரத்தை நோக்கி.

மழை பெய்ந்ததினால் பலர் வயலில் ஏர்கலப்பையை ஏந்தி நின்றார்கள் இருக்கும் ஈரத்தை வைத்து தங்கள் வயிற்றை காயவிடாமல் இருப்பதற்கு உழுதுக் கொண்டிருந்தார்கள் பல ஏழைகள் மழையின்றி அழுதுக் கொண்டு இருக்கிறார்கள்.

மாலையில் ஜெய்பூர் வந்தடைந்தோம் மீண்டும் மழையும் வந்தது.

3 comments:

துளசி கோபால் said...

இங்கே பெரிய பிரமாண்டமான டேக்ஸாவில் உணவு கஞ்சி தயாரித்து அனைவருக்கும் வழங்குவதாக எங்கள் கீழ்வீட்டு உம்மா சொல்லி இருக்காங்க.

இன்னும் இது இருக்குதுங்களா>

கிளியனூர் இஸ்மத் said...

இருக்கிறது துளசி கோபால் அதை எழுத மற்ந்துவிட்டேன்...நினைவு படுத்தியமமைக்கு நன்றி....

"ராட்ஷச அண்டா தர்ஹாவின் மையத்தில் வைத்துள்ளார்கள் அதில் நேர்ச்சை கொண்டவர்கள் காணிக்கைகளை போடுகிறார்கள் அந்தக் காணிக்கைகளை கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் உருஸ் அன்று அந்த அண்டாவில் உணவு தயாரித்து அனைவருக்கும் வழங்குகிறார்கள் இது இன்றும் நடமுறையில் உள்ளது."

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அரிய தகவல்களும், அழகான புகைப்படங்களும் கட்டுரைக்கு மேலும் அழகு.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....