உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, December 16, 2009

பிஞ்சு மனசு


இரண்டாம் வகுப்பு படிக்கும் எனது இளைய மகளுக்கு தமிழ் பரிட்சை.ஆத்திச்சூடியை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும்.
அதை மனனம் செய்து இருக்காளா கேளுங்கள் என்று என்மனைவி என்னை உசுப்பேத்தினார்.
என்குழந்தைகளிடம் படிப்பைப் பற்றி நான் அதிகம் கேட்பதில்லை.என்றாவது ஒருநாள் விசாரிப்பதோடு சரி. இந்த செயல் என் மனைவிக்கு மிகுந்த வருத்தத்தை இன்று வரையில் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
காலையில் ஆறுமணிக்கு எழுந்து பள்ளிக்கூடம் புறப்பட்டு வீட்டுக்கு மதியம் இரண்டு மணிக்கு வருகிறார்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெரிய மகளும் இளைய மகளும்.
வந்து சாப்பிட்டதும் குர்ஆன் ஓதுதிக் கொடுப்பதற்கு ஆசிரியர் வந்துவிடுவார் ஒருமணி நேரம் குர்ஆன் ஒதுவார்கள்.
அதன் பிறகு ஒருமணி நேரம் உறக்கம் மாலை ஆறு மணிக்கு டியூசன் வாத்தியார் வருவார் இரவு எட்டு முப்பது அதிகபட்சம் ஒன்பது மணி வரை படிக்கனும.; அவருபோன பின் பள்ளிக்கூடத்தில் கொடுத்த வீட்டுப்பாடம் செய்யனும் பிறகு ஒன்பதரைக்கு சாப்பிடனும் இதுக்குமேல குழந்தைகளுக்கு மூடு இருந்தால் அரைமணிநேரம் விளையாடுவார்கள்.
இரவு பத்தரைக்குள் படுக்கவைப்பது வழக்கம் மீண்டும் வழக்கம்போல் காலை ஆறுமணி.
கிட்டதட்ட பதிநான்கு மணிநேரம் படிப்பின் சிந்தனையில் இருக்கும் அந்த குழந்தைகளிடம் தினமும் அவர்களின் படிப்பைப் பற்றி விசாரித்தால் அந்த குழந்தைகளின் மனோநிலை எப்படி இருக்கும்.?

படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறைந்துவிடும் அல்லது வெறுத்து விடுவார்கள்.

ஆனால் அவர்களின் படிப்பறிவு எப்படி இருக்கிறது என்பதை அவர்களை விசாரித்து தெரிந்துக் கொள்வதைவிட அவர்களின் செயல்பாடுகளில் எளிதாக தெரிந்துக் கொள்ளலாம்.
ஒன்றை மனனம் செய்துவிட்டால் அதை பெற்றோர்களிடம் ஒப்பித்துக் காண்பித்து சந்தோசப்படுவார்கள்.அவர்கள் தெரிந்தததை கூறும்போது நாம் அவர்களுக்கு தெரியாத ஒன்றைக் கேட்டு அவர்களின் உற்சாகத்தை முடக்கக் கூடாது. அவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும் சொல்லியப் பின் அவர்களை தூண்டுதலான வார்த்தைகளால் அவர்களை உற்சாகப் படுத்தவேண்டும்.

உற்சாகம் என்பது அன்பை வளர்த்து அறிவுத் திறனை மேன்மைப்படுத்தும் என்பது அனுபவக் கூற்று.

ஆத்திச்சூடியை படித்து காட்டேன் என்று என் மகளிடம் கேட்க அவள் திருதிரு என விழித்தாள். அவள் விழிப்பதைக் கண்டதும் எனக்கு என் மனைவி சொன்ன வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வந்தது. நாம் கண்டுக்காமல் இருந்தது தப்பாகி விட்டதோ டியூசன் வைத்தும் ஒழுங்காக படிக்கவில்லையே என்று எனக்குள் கோபத்தை ஏற்படுத்தியது.

அதட்டலாக என் மகளிடம் நீ என்னப்படிக்கிறே ஆத்திச்சூடியே உனக்கு தெரியல என்று கோபமாக கேட்டதும் பயந்தவளாய் எனக்கு முதல் வார்த்தையை சொல்லிக் கொடுங்க பாக்கிய நான் சொல்கிறேன் என்றாள்.

கொடுமையை எதிர்த்து நில் என்று முதல்வரியை சொன்னேன்.மீதி உள்ள வரிகளை திக்கிதெனறி ஒப்பித்தாள். ஏன் இவ்வளவு தினறல் என்று அதட்டினேன்.பத்துமுறை படித்துவிட்டு பார்க்காமல் என்னிடம் சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டேன். பத்துநிமிடத்தில் தயாரானாள்
மீண்டும் முதல்வரி தெரியவில்லை.உடனே தனது சகோதரியிடம் கேட்டுவிட்டு ஒப்பித்தாள்.

பத்துமுறை படித்தும் உனக்கு எப்படி முதல் வரி மறக்கிறது என்றேன்.முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு நின்றாள்.
மறுதினம் ஒப்பிக்கும் பரிட்சை முடிந்து வீட்டுக்கு வந்ததும் எனது அலுவலகத்துக்கு தொலைபேசி செய்து ஆத்திச்சூடியை அரைநொடியில் முழுவதையும் கூறினாள்.
வெரிகுட் வெரிகுட் என்று அவளை உற்சாகப்படுத்தினேன் அவளுக்கு சந்தோசமாக இருந்தது.

அதட்டல் இல்லாமல் நான் கேட்டிருந்தால் தினறல் இல்லாமல் நேற்று படித்துக் காட்டிருப்பாள். நான் அதட்டியதும் குழந்தைக்கு பயம் வந்துவிட்டது அந்த பயம் படித்ததை உடனே சொல்லமுடியாத திணறலை ஏற்படுத்திவிட்டது.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களின் அதட்டல் டியூசனிலும் அதட்டல் ஒதுவதிலும் அதட்டல் போதாத குறைக்கு பெற்றோர்களின் அதட்டல் இவ்வளவு அதட்டல்களை தாங்கக்கூடிய குழந்தைகளின் மனசு பயத்திலேயே உலாவந்துக் கொண்டிருக்கும்.

இந்த பயமே குழந்தைகளை எவ்வளவு படித்து மனனம் செய்திருந்தாலும் கேட்கப்படும் போதும் பரிட்சையின்போதும் பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளாகநேரிடும் என்ற பயத்திலும் பதட்டத்திலும் பல கேள்விகளுக்கு பதில் எழுதாமலேயே விட்டுவிடுகிறார்கள்.

கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஒரு ஆய்வு செய்தார்கள். இரண்டு செடிகளை தனித்தனியே வைத்து அவைகளுக்கு சமமாக தண்ணீர் இட்டு தினமும் ஒரு செடிக்கு முன் நின்று இது நன்றாக வளரவேண்டும் என்று எண்ணுவதும் மற்றொரு செடிக்கு முன் நின்று இது நன்றாக வளரவேக் கூடாது என்றும் தியானம் செய்வதைப் போல் செய்தார்கள்.

சில தினங்களில் எந்த செடி நன்றாக வளரவேண்டும் என்று எண்ணினார்களோ அது நன்றாக வளர்ந்திருந்தது. எது வளரக் கூடாது என்று எண்ணினார்களோ அது வளரவில்லை. இது எண்ணத்தின் வலிமையை தெரிந்துக் கொள்வதற்கு ஆய்வு செய்யப்பட்டது.

குழந்தைகளின் எண்ணங்களில் தாழ்வு மனப்பான்மையை எந்த சூழ்நிலையிலும் ஏற்படுத்தி விடவேக்கூடாது. நம் குழந்தைகளின் மீது முதலில் நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அவர்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன விசயங்களை பாராட்டவேண்டும் உற்சாகப்படுத்தவேண்டும்.

உற்சாகம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவைப்படுகிறது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பலருக்கு தெரிந்திருக்கும் ஆனந்தவிகடனில் தொடர் எழுதியவர் பல நூல்கள் எழுதி உள்ளார். அவருடைய வலைதளத்தில்
“இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.” – என்ற வாசகத்தை பதிவிட்டதின் நோக்கம் உற்சாகத்தை எதிர்நோக்கிதான்.

பிரபலமானவர்களின் எதிர்ப் பார்ப்பு இப்படி என்றால் புதிதாக வலைதளம் வைத்து எழுதிக் கொண்டிருக்கும் என்னை உங்களைப் போன்றவர்களின் எதிர்ப் பார்ப்பு எப்படி இருக்கும்?
இந்த இடுக்கையின் நோக்கம் குழந்தைகளுக்கு உற்சாகத்தை அள்ளிக் கொடுங்கள் பிஞ்சு மனதில்லுள்ள பயத்தை கிள்ளி எரிந்து விடுங்கள் என்று முடிப்பதற்கு முன் என் இளைய மகளிடம் உன்னைப் பற்றி வலைதளத்தில் இடுக்கை இடப்போகிறேன் என்று கூறியதும் ஆத்திச்சூடி வாசிக்கிறேன் கிளிப் எடுத்து போடுங்கள் டாடி என்று கேட்டுக் கொண்டதற்கினங்க உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்.



Monday, December 14, 2009

உதவி செய்வோம் உதவி செய்த எண்ணத்தை உதவி செய்திடுவோம்


மனிதனுக்கு பிரதானமாக இயங்குவது மூளை. அதன் உதவியால் உடலின் செயல்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உதவி என்பது இல்லாமல் போனால் இந்த உலகமே ஸ்தம்பித்து விடும். இயக்கமே இல்லாமல் போய்விடும்.அதனால் உதவி என்பது வாழ்க்கையின் அச்சாணியாக இருக்கிறது.

மனிதர்களுக்குள் உதவி செய்துக் கொள்வது மனிதநேயத்தையும் பரஸ்பர அன்பையும் வளர்க்கும். ஆனால் அந்த உதவியே ஒரு மனிதனுக்கு உபத்திரமாக மாறும் போது அவனின் மனோநிலை எப்படி எல்லாம் பாதிக்கப்படும் என்பதை அனைவருமே உணர்ந்திருப்போம்.

ஒருவருக்கொருவர் உதவிகள் இல்லாத வாழ்க்கை ஒருவருக்கும் இல்லை .

நாம் நம் உடன் பிறந்தவர்களுக்கு,நண்பனுக்கு,உறவுகளுக்கு,ஊரார்களுக்கு, தெரிந்தவர்களுக்கு, தெரியாதவர்களுக்கு என்று உதவிகள் பல செய்துக் கொண்டிருப்போம்.

சிலர் எதிர்ப்பார்ப்புகளை மனம் நிறைய சுமந்துக் கொண்டு பெயருக்காகவும், புகழுக்காகவும், மரியாதையை எதிர்நோக்கியும் உதவிகள் செய்வார்கள். அந்த உதவிகள் அனைத்தும் ஏமாற்றத்தை தரும்போது அளப்பெரிய வேதனையை சுமந்துக் கொண்டிருப்பார்கள்..

ஒருவருக்கு கடன் கொடுத்தால் அந்தக் கடனை நாம் எழுதி வைத்திருப்பது வழக்கம். கடன் பெற்றவர் திரும்ப அதை செலுத்தி இருப்பார் அதை வரவும் வைத்திருப்போம்; ஆனால் அவருக்கு செய்த அந்த உதவியை நாம் என்றும் மறப்பதில்லை.செய்யப்படும் உதவிகள் செய்தவரிடம் எதிர்பார்ப்பின் மனோநிலையை உருவாக்குகிறது.

உதவி பெற்றவரிடமிருந்து ஏதோ ஒரு வகையில் ஒரு பிரதிபலனை மனம் எதிர்நோக்குகிறது. முகம்தெரியா ஒருவருக்கு செய்த உதவியை நம் எண்ணத்தில் 'செய்தோம்' என்ற செயலை பதிவாக்கி வைத்திருப்போமே தவிர, அந்த முகந்தெரியா நபரிடமிருந்து பிரதிபலனை நம் மனம் எதிர்பார்ப்பதில்லை.
இப்படி பலருக்கு செய்யப்பட்ட உதவிகளை காலங்கள் பல கடந்தாலும் நம் எண்ணத்திலிருந்து கடக்காமல் வரிசைப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

இன்று உதவிப் பெற்ற நண்பன் நாளை அவன் பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டால் அவன் என்னை மதிக்கவில்லை திமிர் பிடித்துவிட்டது என்னால் தான் இந்தளவு வளர்ந்தான் என்று இன்னொரு நண்பரிடம் நாம் புலம்பி மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருப்போம்.

ஏதோ ஒன்றை நண்பனுக்கு உதவியாக கொடுத்துவிட்டு, அதை மீண்டும் பெற்றும் விட்டு நம் மனம் சஞ்சலப்படுவதின் காரணமென்ன?

நாம் கொடுத்தது பொருளை அல்லது பணத்தை மட்டுமல்ல, அதன் கூடவே எதிர்ப்பார்ப்பையும் கொடுத்திருக்கிறோம். அவரிடமிருந்து நாம் கொடுத்த பொருள் அல்லது பணம் திரும்ப வந்து விட்டது. ஆனால் நம் எதிர்பார்ப்பு மட்டும் அவரிடம் பாக்கியாக தொக்கிக் கொண்டு நிற்கிறது. அந்த பாக்கி நாம் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் நன்றி உள்ள நாயாக வாலை ஆட்டிக் கொண்டே நிற்கவேண்டும் என்று நம்மனம் எதிர்ப்பார்க்கிறது. அவர் நம்மைக்கண்டு வாலை ஆட்டாத போது
மன உலச்சலைச்சலும் வலியும் நம் மனம் ஏற்படுத்துகிறது.

எண்ணத்தில் எதையெல்லாம் எழுதிவைக்கின்றோமோ அவைகளை நாம் டெலிட் செய்யவேண்டும். இல்லையெனில் அது மனதில் வைரஸாக மாறி வலியை உண்டுப்பண்ணிக் கொண்டே இருக்கும் இந்த வலிக்கு யாரும் காரண கர்தாவாக முடியாது. அவரால் இவரால் தான் எனக்கு இந்த நிலமை ஏற்பட்டது என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளலாம். ஆனால் வேதனையை அனுபவித்துக்கொண்டிருப்பது அவரல்ல நாம் தான்.

எண்ணம்போல் வாழ்வு என்று சொல்வதும் இதற்குத்தான். நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாகவே மாறிவிடுகிறோம் .

ஒருவருக்கு உதவி செய்வது நல்ல எண்ணம்தான் செய்த அந்த உதவியை எண்ணத்தில் வைத்துக் கொள்ளாமல் அதையும் உதவி செய்துவிட்டால் எந்த மனக்கஸ்டமும் நம்மை வந்தடையாது.

எண்ணம் என்பது ஒரு சதுரப்பரப்பான நிலம்; அதில் நாம் எதை விதக்கின்றோம் என்பது முக்கியம். மலர்களை விதைத்தால் நறுமணத்தை சுமப்போம். முட்களை வளர்த்தால் அதன் குத்தலின் வலியை சுமப்போம்.

நம்மிடம் உதவிப் பெற்றவர்கள் செய்தவர்களை மறந்துவிட்டார்கள் என்பதற்காக செய்தவர் எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாதுதானே?.அந்த பாதிப்பை ஏற்படுத்துவது அவரவரின் எண்ணங்கள் தானே?

சிலர் பலருக்கு செய்த உதவிகளை அப்படியே மறந்திருப்பார்கள். உதவிப் பெற்றவர் அவரிடமே செய்த உதவியை நன்றி மறவாமல் நினைவுப் படுத்தும்போது அப்படி நான் செய்தேனா என்று மறந்த நிலையிலே வினவுவார்கள்.அப்படியானவர்கள் எந்த சஞ்சலத்திற்கும் ஆளாகுவதில்லை.

எதிர்ப்பார்புகள் எந்தநேரத்திலும் ஏமாற்றத்தை தரலாம் அப்படி தரப்படும் ஏமாற்றங்களை ஏற்றும் கொள்ளும் மனபக்குவம் நம்மில் எத்தனைபேரிடம் இருக்கிறது.?

Thursday, December 10, 2009

மனித நேயத்தைக் காக்கும் மனிதர்கள்


இறை என்பது வாழ்க்கையின் அங்கம். சிலர் மறுக்கலாம் பலர் ஏற்கலாம்.
மறுக்கப்படுவதும்,ஏற்கப்படுவதும் அவரவர்களின் நம்பிக்கையும்,அறிவுத் தெளிவையும் பொருத்தது.
இருப்பதை இல்லை என்று கூறுவதும்,இல்லையை இருக்கிறது என்று வாதிப்பதும் இன்று பலருக்கு வாழ்க்கையாக இருக்கிறது. இருப்பது இருக்கிறதுதானே அதை எவ்வளவு காலத்திற்கு இருக்கிறது,இருக்கிறது என்று வாதிப்பது இல்லையும் அப்படித்தான்.

இருந்தாலும் இல்லை என்றாலும் மனிதன் மனிதனாக வாழ்ந்தாக வேண்டும்.ஒரு கட்டுப்பாட்டுக்குள் மனிதன் அடங்கவேண்டும். தனது செயல்களை யாரோ கண்காணிக்கின்றார்கள் அது இறையோ அல்லது இயற்கையோ என்ற உள் உணர்வு அவனை உசுப்பிக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றைச் சார்ந்து வாழக்கூடியவர்கள் நூறு சதவீதம் அதைச் சார்ந்து வாழ்ந்து விட்டால் அவர்களால் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. அதை முழுமையாகப் கடைபிடிக்காமல் நானும் மனிதன் தான் தவறு செய்யக் கூடியவன்தான் என்று வாதம் செய்யக் கூடியவர்களால் பலருக்கு தொந்தரவு இருக்கிறது.

மனிதன் மனிதனாக வாழ்வதற்காக இன்று வரையில் எத்தனையோ உபதேசங்கள், எத்தனையோ வழிகாட்டல்கள், எத்தனையோ வழிபாடுகள் இத்தனை இருந்தும் இன்னும் கிமு, கிபி, ஹிஜ்ராவையும் தாண்டி நவீனம், அறிவியல் என்று மனித அறிவு வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கின்ற பின்பும் முழுமையாக மனிதம் வளரவில்லை, மனித நேயம் மலரவில்லை என்றால் குறை எங்கிருக்கிறது.

மனித நேயத்திற்கு பாதகம் விளைவிக்க கூடியவர்கள் இறைநம்பிக்கை அற்றவர்களா?, இறை நம்பிக்கையாளர்களா?, மதங்களை சார்ந்தவர்களா?, மதமே இல்லாதவர்களா ? யார் என்று ஆய்வு செய்தால் ஏதோ ஒன்றை சார்ந்தவர்களாக ஒரு காரணத்தை கற்பிப்பவர்களாகதான் இருக்கிறார்கள்.

எங்கோ ஒரு இடத்தில் மனிதநேய மாநாடு போடுவதை விளம்பரம் செய்கின்றோம்.
மதநல்லிணக்க விழாவை பிரகடணம் படுத்துகின்றோம் எதற்காக?
ஒற்றுமையை மனித நேயத்தை வளர்ப்பதற்கு அல்லவா?

உலகம் தோன்றி எத்தனைஆண்டுகள்?,
உயிர்கள் தோன்றி எத்தனை ஆண்டுகள்?,
தீர்க்கதரிசிகள் மறைந்து எத்தனை ஆண்டுகள்?,
வேதங்கள் தோன்றி எத்தனை ஆண்டுகள்?
ஆனால் இன்றும் தீர்க்கதரிசிகளின் வேலையை பல மதத்தவர்களும் செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆண்டுகள் கடந்து விட்டன; ஆனால் மனித நேயம் இன்னும் தத்தளித்துக் கொண்டுதானே இருக்கிறது. எல்லா மதங்களும் மனிதநேயத்தை தான் போதிக்கிறது என்பது திண்ணம். மதங்களை பின்பற்றக் கூடியவர்கள் முழுமையாக பேனாததின் வெளிப்பாடுதான் இன்று மனிதநேய மாநாடுகள் மத நல்லிணக்க விழாக்கள்.

பெரும்பாலான உபநியாசர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கொள்கைகளை அல்லது கருத்துக்களை முழுமையாக உள்வாங்கி விளங்கி அதை தங்களின் வாழ்க்கையாக்கிய பின்னரே மற்றவர்களுக்கு போதனை செய்ய வேண்டும்; ஆனால் பெரும்பாலோர் மற்றவர்களுக்கு போதிப்பதோடு சரி. கருத்து விவாதங்களுக்காக காலங்களை கடத்துகிறார்களே தவிர பேணுதல் என்பது நம்மிடையே மிகக் குறைவாகதான் இருக்கிறது.

மனிதன் மனிதர்களை நேசிக்கவேண்டுமானால் அவன் தன்னை முழுமையாக அறியவேண்டும். அறிதலில் மேம்புல் மேய்ந்தால் நேசம் என்பது வேசமாகவே இருக்கும். வாழ்க்கை நாடகத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்க்காக நடித்துக் கொண்டிருக்க வேண்டும். இன்று பலரும் நடித்துக் கொண்டிருக்கின்றோம். உண்மையான அன்போ நேசமோ பண்போ நம் எல்லோரிடமும் குறைந்தே இருக்கிறது.

இறைவணக்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க கூடிய ஒருவர் தாகத்துடன் நிற்கும் ஒரு நாய்க்கு தண்ணீர் கொடுக்காமல் சென்றால் அவரின் வணக்கம் யாரை திருப்தி படுத்துவற்காக வணங்கப்பட்டது?

எந்த வேதங்களை வாசித்தாலும் வாசிப்பவரின் அறிவுக்கேற்ப அவரின் புரிதல் இருக்கும். வேதத்திற்கு வியாக்கியானம் சொல்லக் கூடியவர்களிடமும் அப்படித்தான். நானும் படித்தேன், நானும் புரிந்தேன் என்று வாதங்கள் தான் வழுவாகிக் கொண்டிருக்கிறதே தவிர உண்மையை உணர்வதற்கு முயற்சிகள் என்பது மிக மிக குறைவு.

பிறந்த குழந்தை தாயின் மார்பகத்தில் பாலை சப்பிக் குடிக்கிறது. ஆனால் சப்பினால்தான் பால் வரும் என்று அந்த குழந்தைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்.

பிறக்கும் குழந்தை அறிவுடன் பிறக்கிறது, அன்பை நேசக்கிறது, கவுடு, சூது தெரியாது. கோபத்தை நாம் வெளிப்படுத்தினால் குழந்தை அழும். வன்மையை விரும்புவதில்லை அதன் தொடக்கமே அன்பு பாசம் நேசம் ஆனால் நாளடைவில் அது மறந்து போனது எப்படி? அன்பே உருவான குழந்தைக்கு மனித நேயத்தை போதிக்க வேண்டிய அவசியம் ஏன்? எது மறக்கடித்தது?

ஒரு மகான் தன் மாணவர்களுடன் காட்டுக்குள் செல்கிறார். செல்லும் வழியில் மலங்கள் கிடக்கிறது இதைப் பார்த்த மாணவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒடினார்கள். இதைக் கண்ட மகான் அங்கேயே நின்றார் மாணவர்கள் தூரம் சென்று மகானைப் பார்க்கிறார்கள். மலத்தின் பக்கத்திலேயே மகான் நிற்பதைக் கண்ட மாணவர்களுக்கு வியப்பாக இருந்தது.

மாணவர்கள் மகானை நோக்கி வந்தார்கள் ஒரு மாணவர் மகானிடம் கேட்டார்.
இந்த அசிங்கத்தின் துர்நாற்றம் தாங்க முடியாமல் நாங்களெல்லாம் ஒடிப்போனோம் நீங்கள் மட்டும் எப்படி இங்கேயே நிற்கிறீர்கள்? என்றார்.

அதற்கு அந்த மகான் இந்த மலம் என்னுடன் பேசியது என்றார்.மாணவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. என்ன பேசியது? என்று ஆர்வத்துடன் கேட்டார்கள்.

நேற்று கடைகளில் அரிசியாக, காய்கனிகளாக, உணவு பண்டங்களாக இருந்தேன் இந்த மனிதர்கள் என்னை வாங்குவதற்கு ஆசையாக ஆவலாக ஒடோடி வந்து பணம் கொடுத்து வாங்கி என்னை சமைத்து, ருசித்து, ரசித்து அருகில் வைத்து உண்டார்கள். ஒரே ஒரு இரவு மட்டும் அவர்களின் வயிற்றில் தங்கினேன் காலையில் வெளியில் வந்த என்னைக் கண்டு மூக்கை பிடித்துக் கொண்டு ஒடுகிறார்கள் துர்நாற்றம், அசிங்கம் என்கிறார்கள் என்று என்னுடன் பேசியது என்றார்.
ஒரு மகானின் வாழ்க்கை சரித்திரத்தில் படித்தக் கதை.

நாம் இன்னும் மாணவர்களாகதான்த் இருக்கிறோம்.எதை அசிங்கம் என்று நினைக்கின்றோமோ அதில் எத்தனை உண்மை இருக்கிறது. எதையும் ஆழமாக சிந்திப்பதில்லை. வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். ஒரு உண்மையின் கீழ்தான் இந்த உலகம்.
மதங்களை நேசிக்குமளவு அதை முழுமையாக புரிதலும் அவசியம்.
மறந்துபோன அன்பை நினைவுக் கொள்வோம் மனிதர்களை நேசிப்போம் மதங்கள் நம்மை நேசிக்கும்.

Monday, December 7, 2009

ஆட்டோ…ப்ளீஸ்

அதிகமான ஊதியத்தை பெருவதற்காக வேண்டி அமீரகம் வந்தவர்களில் நானுமொருவன். ஆனால் இன்றைய சூழல் மாறிக் கொண்டு வருகிறது. அரபு நாடுகளை விட நம் தாயகமே சிறந்தது என்ற நிலை வளர்ந்து வருகிறது.காரணம் விலை ஏற்றங்கள். விலைகள் ஏறக்கூடிய அளவு பலருக்கு சம்பளம் ஏறுவதில்லை. வந்தக் காலத்தை கணக்கிலெடுத்தால் கையில் மிஞ்சிய தொகை கடனாக இருக்கிறது.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கிறது நம் நாட்டில் நம்மால் வாழமுடியுமா? என்ற கேள்வி என்னுல் எழுந்தது; அதை தெளிவு படுத்தியது ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் நடந்த உரையாடல்.

இரண்டாண்டுகளுக்கு முன் சென்னை சென்றிருந்தேன். மூன்று தினங்கள் சென்னையில் தங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. T நகர் செல்வதற்கு ஆட்டோவை அமர்த்திக் கொண்டேன்.

ஆட்டோ ஓட்டுனர் சுமார் 45 வயதுமிக்கவராக தோற்றமளித்தார்.
அவரிடம் 'உங்க பொழப்பு எப்படி இருக்கு?' என்று பேச்சுக் கொடுத்தேன்.
"நன்றாக இருக்குது சார்; வீட்டுக்கு போய் மூன்று தினங்கள் ஆச்சு; கோயிலுக்கு போகனும் பெரிய சிலவாக இருக்கு, அதனால வீட்டுக்கு போகாமல் வேலைப் பார்க்கிறேன்" என்றார்.

'உங்க வீடு எங்கிருக்கு' என்றேன்?
'அம்பத்தூர் பக்கத்துல சார்; என்றார் .
"அம்பத்தூர் தூரமில்லையே; பக்கத்துல தானே இருக்கீங்க தினமும் போய் வரலாம் தானே" என்றேன்.
"போகலாம் சார் வீட்டுக்கு போயிட்டா நேரம் எடுத்துடும் அதனால இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு போவேன்" என்றார்.

"எத்தனை பிள்ளைகள்?' கேட்டேன்.
"மூனு பொட்ட புள்ளைங்க; பெருசு காலேஜ் போகுது மற்ற ரெண்டும் இங்கிலீஸ் மீடியத்துல படிக்குதுங்க" என்று அவர் கூறியதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

'நீங்க என்ன படிச்சுருக்கீங்க?'

"பெருசா ஒன்னும் படிக்கல அதனால தான் என் பிள்ளைங்கல நல்லா படிக்க வைக்கிறேன்" என்றார்.

'படிப்பு சிலவே பெரிய தொகை வருமே எப்படி சமாளிக்கிறீங்க?'

"ஆமா சார்! சிலவு அதிகம் தான் அதனால தான் இரண்டு மூனுநாளு கண்விழிச்சி ஆட்டோ ஓட்டுறேன் கிடைக்கிது சார்" என்றார்.

"இப்படி ஓய்வில்லாமல் ஆட்டோ ஓட்டினா உங்க உடம்பு பாதிக்குமே ரெஸ்ட்டும் தேவைதானே" என்றேன்.

"கஸ்டமர் இல்லாத சமயத்துல எங்கனயாவது ஓரமா வண்டிய நிறுத்தி தூங்கிக்குவேன்: என்றார்.

'வீடு வாடகை எவ்வளவு கொடுக்குறீங்க.?'

"சொந்த வீடு சார் என்றார். நான் மெட்ராஸ் வந்து இருபது வருடம் ஆச்சு வந்தப்ப வாடகைவீட்டுலதான் இருந்தேன் 15 வருசத்துக்கு முன்னால இடம் வாங்கி வீடு கட்டிட்டேன்" என்றார்.

'வேற ஏதும் தொழில் பண்றீங்களா?'

"இல்ல சார் நமக்கு தெரிஞ்சது ஆட்டோ மட்டும்தான்" என்றார்.
"ஆட்டோ ஒட்டி இவ்வளவு சம்பாதிக்கிறீங்களா?ஆச்சரியமா இருக்கு சார்… எப்படி இது உங்களால முடியுது . வெளிநாட்டுல 20 வருசத்துக்கு மேல இருந்தும் முக்கி முக்கி ஒரு வீட்டை கட்டுவதற்கு எவ்வளவு கஸ்டப்படுறாங்க கடனாளியா இருக்காங்க நீங்க சொலறத என்னால நம்ப முடியல சார்" என்றேன்.

"என்ன சார் நம்பிக்கை! மெட்ராசுக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேரு வராங்க, போறாங்க தெரியுமா? இப்ப இருக்குற ஆட்டோ மாதிரி இன்னொரு மடங்கு தேவை இருக்கு; எங்கேயும் ஆட்டோ சும்மா நின்னு நீங்க பார்க்க முடியாது. அப்படி நின்னா அது ரிப்பேருலதான் நிக்கும். மனுஷங்கிட்ட நேர்மையும், வைராக்கியம் இருந்தா எப்படியும் முன்னுக்கு வரலாம் சார்." என்றார்

அவருடைய அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது .
உண்மைதான் மனுஷனிடம் நேர்மையும், வைராக்கியமும் இருக்க வேண்டும் அது இல்லாத போது வாழ்க்கையே நேர்மை இழந்து விடும்.

ஆட்டோ ஓட்டக் கூடிய ஒருவரால் தன் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுக்க முடிகிறது, தன் குடும்பத்தை சொந்த வீட்டில் வாழவைக்க முடிகிறது, தேவைகளை நிறைவேற்ற முடிகிறது, இத்தனையும் நம் நாட்டில் உழைத்து செய்யமுடிகிறது என்றால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்தளவு வளர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

வளைகுடாவில் உழைத்து வளமிக்கவர்களாக ஆனவர்கள் சிலர். ஆனால் இன்னும் வளமோடு வாழ்ந்துவிடலாம் என்ற கனவில் உழைக்கக் கூடியவர்களில் நானும் ஒருவன்.
பல ஆண்டுகளை கடந்து பிழைப்புக்காக வாழ்க்கையை இழந்து இன்னும் வீடு கட்ட முடியாதவர்கள் எத்தனைபேர்? உழைப்பு என்பது வளைகுடா நாட்டுக்கு மட்டும் சொந்தமானதா? அந்த உழைப்பை நம் நாட்டில் மூலதனமாக்கினால் முன்னேற்றம் காண முடியாதா?
நம் நாட்டில் உழைத்து வளமான வாழ்க்கை வாழ முடியுமா ? என்ற கேள்வி என்னுல் எழும்போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனரை நினைத்துக் கொள்கிறேன்.

Thursday, December 3, 2009

ஆகாயத்தில் ஒரு அவமானம்


ஒருமுறை தாயகம் செல்லும்போது மும்பை வழியாக சென்றேன்.அப்போதெல்லாம் சென்னைக்கு நேரடி விமானச்சேவை இல்லை.துபாயிலிருந்து விமானத்தில் புறப்பட்டபோது எனது முன் இருக்கையில் தமிழ்நாட்டைச் சார்ந்த அன்பர் ஓருவர் இருந்தார்.

நாங்கள் இருவரும் விசாரித்துக் கொண்டோம்.விமானம் ஆகாயத்தில் பறந்துக் கொண்டிருந்தது.கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் வந்து என்னுடைய கூலிங் கிளாஸை காணவில்லை நான் சற்றுமுன் பாத்ரூம் போய் வந்தேன் எனது பக்கத்தில் ஒரு உபி காரன் அமர்ந்திருக்கிறான் அவன்தான் எடுத்திருப்பான் என்று கூறினார்.

நீங்க உங்க உடமைகளை சோதனை செய்து பாருங்கள் என்றேன்.தேடிவிட்டேன் கிடைக்கவில்லை அவன் தான் எடுத்திருக்கான் என்று உபி காரர் மேல் பழிசுமத்தினார்.
சரி அவரிடம் கேளுங்கள் என்றேன் கேட்டுவிட்டேன் அவர் எடுக்கவில்லை என்று உறுதியாக கூறுகிறார் என்றார்.

என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை.அவருடைய பொருள் பாவம் எவ்வளவு ஆசையாக வாங்கி இருப்பார்.இப்படி தொலைத்துவிட்டாரே என வருந்தினேன்.
மும்பை வந்து இறங்கி இமிக்கிரேசன் வந்தேன்.அந்த தமிழ் நண்பர் போலீஸ்காரரிடம் தன்னுடைய கூலிங் கிளாஸ் காணமல் போனதாகவும் பக்கத்தில் உள்ள உபி காரர் எடுத்து விட்டதாகவும் புகார் கொடுத்துக் கொண்டிருந்தார்.

போலீஸ்காரர் உபி காரரின் உடமைகளை முழுவதையும் சோதனை செய்து பார்த்துவிட்டு அவரிடம் இல்லை என்று கூறிவிட்டார்.அந்த உபி காரரின் முகம் அவமானத்தில் வாடிப்போய் விட்டது.

இமிக்கிரேஷனை முடித்து விட்டு லெக்கேஜ் எடுப்பதற்கு ட்ரோலியை தள்ளிக் கொண்டு வெளியில் வர எத்தணித்தேன்.அந்த தமிழ் நபர் ஒடி வந்து என்னிடம் கூலிங் கிளாஸ் கிடைத்து விட்டது என்றார்.

அப்படியா! எங்கு கிடைத்தது? என்று கேட்டேன் என்னுடைய பேக்கின் அடியில் கிடந்தது என்றார்.எனக்கு சரியான கோபம் வந்தது நீ என்ன மனுஷனா.?அந்த உபிகாரரை இப்படி அவமானப்படுத்திட்டியே அவரு எப்படி யெல்லாம் மனசலவுல வேதனைப்பட்டிருப்பார்.அவரிடம் போய் மன்னிப்பு கேளு என்றேன்.

அவரைப்பார்த்து கேட்டு விட்டேன் என்றார்.அவர் கேட்டாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.ஆனால் எந்த குற்றமும் செய்யாத அப்பாவியின் மனச நோகடித்து விட்டாரே என்ற வருத்தம் எனக்குள் இருந்தது.

அந்த இரண்டரை மணி நேரம் பயணம் முழுவதும் தன்னை குற்றவாளியாக்கியதை எண்ணி உபிகாரர் மன உலச்சல் அடைந்திருப்பார் அல்லவா.? தன் குடும்பத்தை காண்பதற்கு விடுப்பில் தானே அவரும் சென்றுக் கொண்டிருப்பார்.எத்தனை கனவுகள் அவரை சூழ்ந்திருக்கும் அவைகளை ஒருவரின் கூலிங் கிளாஸ் விரட்டி விட்டதே.

தன்னுடைய பொருள் காணாவில்லை என்றால் முதலில் அதை தன்னிடம் தான் தரவாக தேடவேண்டும்.பின்னர்தான் நம ;பக்கத்தில் அல்லது எதிரில் இருப்பவர்கள் என்று விசாரிக்க வேண்டும்.அவசரமாக நாம் ஒருவரை குற்றவாளி யாக்கக் கூடாது.

தன்னை விட உடையில் தரம் குறைந்திருப்பதினால் தன் பொருளை அவர்தான் எடுத்திருப்பார் என்று உறுதி கூறுவது முட்டாள்தனமானது.அப்படி கூறுபவர்கள் நேர்மையான மனிதர்கள் அல்ல .தங்களின் நேர்மையின்மையான குணத்தைதான் அங்கு வெளிபடுத்துகிறார்கள்.
எளிமையாக ஒருவரை குற்றவாளியாக்கி விடுகிறோம்.அதன் வலியை குற்றம் சுமத்தக் கூடியவர்கள் உணர்ந்திருக்கிறார்களா.?அல்லது குற்றம் சுமத்த காரணமான பொருள் கிடைத்ததும் அதை குற்றம் சுமத்தப்பட்ட நிரபராதிக்கு ஈடாக கொடுத்துவிடுகிறோமா.?
இதுவே இங்கிலாந்துகாரனாக இருந்திருந்தால் பல லட்சங்கள் நஷ்ட ஈடாக நீதி மன்றம் மூலம் வசூலித்திருப்பான்.

பொருள்களை நேசிக்குமளவு மனிதர்களை நேசிக்க ஏன் மனிதர்களுக்கு தெரியவில்லை.
எப்பவும் பயணத்தின் போது நம்மிடையே ஒரு வித பதட்டம் இருக்கும்.சில நேரங்களில் சிலர் தங்களின் பாஸ்போர்ட் பணத்தையும் கூட தொலைத்து விடுவார்கள்.நிதானம் என்பது பயணத்தில் பலருக்கு இருப்பதில்லை.

புறப்பட்டதிலிருந்து போய் சேரும் வரையில்.
ஓவ்வொருவரின் பயணமும் பல கனவுகளை சுமந்து பயணித்துக் கொண்டிருக்கிறது தயவுசெய்து ஒரு கூலிங்கிளாசினாலோ அல்லது வேறு எதைக் கொண்டும் கலைத்து விடாதீர்கள்.!

ஈத்பெருநாள் கொண்டாட்டங்கள்....

அதிகாலை ஈத் பெருநாளின் இறைவணக்கத்தை நிறைவு செய்து முசுந்தத்தை நோக்கி படையெடுத்தோம்.
ஐந்தரை பெட்டியாய் ஐந்து குடும்பங்கள் அணிவகுத்தோம்.

தமிழ்பண்பாட்டுக் கழகத் தலைவர் (முன்னால் அமைப்பு) குத்தாலம் அசரப்அலி
ஈமான் அமைப்பின் தணிக்கையாளர் முஹம்மது பாருக்
புளு ஸ்டார் ஸ்டேஸ்னரியின் மேளாளர் அப்துல் முனாப்
யுனைடெட் பேங் சார்ஜா கிளையின் மேளாளர் முஹம்மது சபீர்
இவர்களுடன் நான் ........





இதோ வந்துக்கொண்டிருக்கிறது பிரியாணி சட்டி...
தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வருபவர்கள் முஹம்மது பாருக் அண்ணனும், அப்துல் முனாப் அண்ணன்.


உண்பதற்கு தயாராக அமர்ந்திருக்கும் பசிகள்...

கசப் ஹோட்டல்


சாவிய வாங்கிட்டு வந்து ரூமை திறந்ததுமே இடத்தை பிடித்த பெரிய மலையும் சின்ன மலையும்....





போட்டில் குட்டீஸ்களின் ஆட்டம்

இவ்வளவு பவ்யமாக கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் குத்தாலம் அசரப்அலி அண்ணன் அருகில் யார் இருந்திருப்பார்.....

முசுந்தத்தில் இரவு தங்கிவிட்டு காலையில் போட்டிங் ஹவுஸ் சென்று பேரம்பேசி ஒருநாள் வாடகைக்கு போட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கடலில் மிதந்தோம். உணவுகள் நேரத்திற்கு சரியாக கொண்டு வந்து கடலிலேயே தருகிறார்கள். எங்கு திரும்பினாலும் மலைகள் நடுவில் கடல் அலைகள்.
உற்சாகத்துடன் நடுக்கலில் வாழ்க்கை ஜாக்கெட்டை அணிந்துக் கொண்டு முனாப் சபிர் குளித்தார்கள்.
குழந்தைகளின் கொண்டாட்டம் பெற்றோர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.
பாருக் அண்ணனின் குடும்ப அன்யோன்யம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
குத்தாலம் அசரப்அலி அண்ணனின் அட்டகாசங்கள் அதிரடி சிரிப்பு மழையை உண்டாக்கியது.
மொத்தத்தில் ஈத்பெருநாளின் கொண்டாட்டங்கள் சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கொண்டாட்டமாகவே அமைந்தது.

கூட்டு குடும்பம் என்பது இந்த காலத்தில் பலருக்கு கசப்பாக இருக்கிறது. ஆனால் கூட்டாக சேர்ந்து சுற்றுலா செல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இனிப்பாக இருக்கிறது.

Tuesday, December 1, 2009

புலவரை புண்படுத்திய புல்லன்கள்...

என் மனதை பாதித்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதில் சம்பந்த பட்டவர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட நான் விரும்ப வில்லை.

சென்ற ஆண்டு ஒரு நிகழ்ச்சிக்காக துபாயிலிருந்து 40 பேர்களுடன் நானும் எனது நண்பர் ஷர்புதீனும் இலங்கை சென்றிருந்தோம்.

அந்த நிகழ்ச்சி கொழும்புவிலிருந்து சுமார் 150 கீ மீ தொலைவில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு இலங்கை வாழ் புரவலர்கள்,புலவர்கள்,காவியர்கள்,கவிஞர்கள்,அறிஞர்கள், ஆலிம் பெருமக்கள் என பெரும் கூட்டமே இதில் கலந்துக் கொண்டார்கள்.

இன்னும் இந்தியா,சிங்கப்பூர்,மலேசியா,குவைத்,கத்தார் போன்ற நாடுகளிலிருந்தும் பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இலங்கை புலவரும் பல காவியங்களை படைத்தவருமான வயதில் எங்களுக்கு மூத்தவருமான அந்த பெரிய மனிதர் எனக்கும் நண்பர் ஷர்புதீனுக்கும் நன்கு அறிமுகமாகி நண்பரானவர் மற்றும் துபாய் வாழ் இலக்கியவாதிகளுக்கு நல்ல பரிச்சயமானவர் .

இரண்டுநாட்கள் நடந்த விழாவிற்கு பிறகு நாங்கள் துபாய் திரும்புவதற்கு ஆயத்தமானோம். இரவு 8 மணிக்கு ஒரு வேனில் நானும் எனது நண்பர் ஷர்புதீனும் மற்றும் துபாய் நண்பர்கள் 3 பேர் அதில் ஒருவர் துபாயில் பத்திரிக்கை நடத்தி அதன் ஆசிரியராக இருந்தவர்.அத்தோடு இலங்கை புலவரும் மற்றும் சிங்கை நண்பர்கள் இருவர்.

நாங்கள் புறப்படுமுன்னே இலங்கை புலவர் கூறினார் கொழும்பில் எனது வீடு இருக்கிறது இரவு அங்கு சாப்பிட்டு விட்டு நீங்கள் விமான நிலையம் செல்லவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.

முன்னாடியே அவர் வீட்டுக்கும் தொலைபேசி செய்து சாப்பாடு தயார் செய்ய சொல்லியும் விட்டார்.

நாங்கள் போகும் வழியில் தேனீர் குடிப்பதற்காக வேனை நிறுத்தினார்கள். நாங்கள் தேனீர் அருந்தினோம். துபாய் பத்திரிக்கையின் ஆசிரியரும் அவரின் இரு சகாக்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இலங்கை புலவர் அவர்களிடம் கெஞ்சினார் இன்னும் கொஞ்ச தூரம் தான் என் வீடு. வீட்டில் சாப்பாடெல்லாம் தயாராக இருக்கிறது கொஞ்சமாக சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

அவர்கள் இதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. வயிறுமுட்ட சாப்பிட்டார்கள்.

அவரின் வீட்டுக்கு வந்தடைந்தோம் அனைவரையும் வீட்டிற்குள் அழைத்தார் .
நாங்கள் அனைவரும் வந்தோம் அந்த மூன்று நபர்களைத் தவிர. இந்த செயல் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது .

இலங்கை புலவர் அவர்களிடம் நீங்கள் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை தேனீர் அல்லது தண்ணீர் அருந்தலாம் வாருங்கள் என்று எவ்வளவோ நயந்து தன் வயதையும் பொருட்படுத்தாமல் அவர்களிடம் கெஞ்சினார்.
அவர்கள் நாங்க வேனிலேயே இருக்கிறோம் என்று பிடிவாதமாக அவர் வீட்டுக்குள் வராமல் இருந்து விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி அவரின் மனதை பெரிதும் பாதித்தது. வருத்தத்தை கொடுத்தது.
பத்திரிக்கை நடத்தியவர் அதன் ஆசிரியராக இருந்தவர் இப்படி நடந்துக் கொள்கிறாரே மற்றவரை மதிக்க தெரியவில்லையே. என்று அந்த புலவர் மனம் குமற நானும் எனது நண்பர் ஷர்புதீனும் அவரை சமாதானப்படுத்தினோம்.

உணவருந்திவிட்டு புலவரிடம் அவர்கள் சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விமானம் நிலையம் நோக்கி புறப்பட்டோம்.

இவர்கள் ஏன் இப்படி நடந்துக் கொண்டார்கள் என்ற காரணத்தை என்னால் ஊடுறுவ முடிந்தது.

இலங்கை புலவர் துபாய் வந்த சமயம் அவருடைய காவியம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியை ஒரு தொலைகாட்சி ஏற்பாடு செய்திருந்தது.
இன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்க பலரை அழைத்திருந்தார்கள் என்னையும் உள்பட . அதில் பத்திரிக்கையின் ஆசிரியரின் சகோதரருக்கும் அழைப்பு .
இந்த பத்திரிக்கை ஆசிரியரின் சகோதரர் தான் பிரபலமானவர் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

இந்த நிகழ்ச்சியில் தன் சகோதரரை மேடையில் அழைத்து அமரவைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு சில வினாடிகளில் அந்த பத்திரிக்கை ஆசிரியரும் அவருடைய சகோதரரும் அவர்களுடைய சகாக்களும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

இந்த சம்பவம் இலங்கை புலவருக்கு தெரியாது.

இதை மனதில் வைத்து கொண்டு இலங்கை புலவரை அவமரியாதை செய்வதாய் எண்ணி தங்களை தாங்களே இழிவு படுத்திக் கொண்டார்கள்.

(இவர்கள் நடத்திய பத்திரிக்கையில் துணை ஆசிரியர்களாக நானும் ஷர்புதீனும் இருந்து விட்டு ஆசிரியரின் குணமறிந்து விலகினோம் என்பது குறிப்பிடதக்கது.)

இந்த ஈனமனிதர்களிடம் பேச்சையும் பழக்கத்தையும் நானும் நண்பர் ஷர்புதீனும் நிறுத்தி விட்டோம்.

மனிதர்களிடம் மனிதனாக நடக்கத்தெரியாத இவர்களை போன்றவர்கள் எத்தனை ஞானம் அறிந்திருந்தாலும் அது சாணத்துக்கு சமம்…!

பதிவர்களே இவர்களை பற்றிய உங்களுடைய கருத்து என்ன…? சொல்லுங்கள்…!