உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, May 31, 2010

உலக புகையிலை எதிர்ப்பு தினம்


இன்றைய தினம் உலக புகையிலை எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
புகையிலை என்றதும் நம் சிந்தைக்கு வருவது சிகரெட்.

இது பலருடைய வாழ்க்கையை புகைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.
ஆண்களைப்போல சில பெண்களும் இன்று புகைப்பதை ஒரு மாடனாக கருதுகிறார்கள்.
ஸ்டைலுக்காக புகைக்கப்படும் பழக்கம் நாளடைவில் வலுவாகி புகைக்காமல் இருக்கமுடியாத சூழலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.
தற்போது ஐடி துறை கால் சென்டர்களில் பணிப்புரியும் இளம் பெண்களிடம் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் வேலையின் பளுவாலும் பசியை மற்றும் உடல் பருமனை குறைப்பதற்கும் புகைக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

சில காலங்களுக்கு முன் விமானத்தில் புகைப்பதற்கு அனுமதியளித்திருந்தார்கள் இன்று விமான நிலையத்தில் கூட புகைப்பதற்கு அனுமதி இல்லை.சில விமான நிலையங்களில் தனி அறையை புகைப்பதற்கு ஒதுக்கியிருந்தாலும் அங்கு சென்று புகைப்பதைவிட ஒரு இரண்டுநிமிடம் நின்று வந்தால்போதும் சிகரெட் குடித்த உணர்வோடு வந்துவிடலாம் அந்தளவு புகைமூட்டமாக இருக்கும்.

முன்னையவிட தற்போது அதிகமான விழிப்புணர்வு புகையிலையின் கெடுதலைப்பற்றி வந்திருக்கிறது பல நாடுகள் பொது இடங்களில் புகைப்பதை தடை செய்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தோனேஷியாவில் இந்த தடை அமுலில் இருந்தாலும் அதிகமானோர் பொது இடங்களில் புகைக்கிறார்கள்.

இதெல்லாம் மற்றவர்களின் ஆய்வு என்னைப்பற்றிய ஆய்வை நான் சொல்லவேண்டும் ஆரம்பத்தில் நான் புகைக்க ஆரம்பித்தேன் மெல்ல மெல்ல புகை என்னை புகைக்க ஆரம்பித்தது.

புகைக்கும் பழக்கம் எங்கு தொடங்கியது என்று என்னிடம் நீங்கள் கேட்டால் நட்பு என்று சொல்வேன்.ஆம் நண்பர்களுடன் ஜாலியாய் தினம் ஒரு சிகரெட் என்று துவங்கிய பழக்கம் அது வளர்ந்து தினம் ஒரு பாக்கெட் (20) என்ற கணக்கில் சில நேரங்களில் சந்தோசமான துக்ககரமான நேரங்களில் கொஞ்சம் அதிகமாகவே புகைத்து என்நேரமும் என் உடலைப்போல் ஆன்மாவைப்போல் என் கூடவே இருந்து இடது பேண்ட் பாக்கெட்டை ஆக்கிரமிப்பு செய்து தனி இடத்தை என்னிடம் பெற்றிருந்தது.

திருமணத்திற்கு பின் எனது மனைவி என்னிடம் சிகரெட்டை விடும்படி எத்தனையோ முறை கேட்டுக் கொண்டிருக்கிறார்.அப்போதெல்லாம் என் மனைவிக்கு கோபம் உண்டாக்குவதற்காக நீ எனக்கு இரண்டாவது மனைவி என்பேன் எப்படி என்றால் உன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னிருந்தே நான் புகைத்துக் கொண்டிருக்கிறேன் அதனால் முதல் மனைவி சிகரெட் என்பேன்.

புகைப்பதற்கு எத்தனையோ காரணங்களை கூறியிருக்கிறேன் ஆனால் அத்தனையும் உண்மையல்ல என்பது புகைப்பவர்களுக்கு தெரியும்.

எனது குழந்தைகள் என்னிடம் இந்த பழக்கத்தை விடுங்களேன் என்று கேட்கும்போது உள்ளுக்குள் வெட்கப்பட்டிருக்கிறேன்.இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை விடமுடியாமல் தவிக்கின்றோமே எப்படியாவது விடவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்ததே தவிர அதைவிட்டுவிடுவதற்கு மனம் தயாராக இல்லை.

பொது நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் பழக்கமுடைய எனக்கு நான் பழகக் கூடிய நண்பர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத்தவிர பல நண்பர்கள் புகைப்பதில்லை.புகைத்துவிட்டு நண்பர்களின் பக்கத்தில் அமரும்போது அவர்களின் முகம் சுளிவதை காணும் என் மனசு வலியை சுமந்திருக்கிறது.வாயை பினாயிலிட்டு கழுகினாலும் சிகரெட்வாடை போவதில்லை.


எனது ஆன்மீக குருவைக்காண குடும்பத்துடன் சென்றபோது புகைப்பதை சொல்லக்கூடாது என்று நான் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதையும்மீறி எனது குழந்தைகள் நான் புகைப்பதை அவர்களிடம் கூறிவிட்டார்கள்.

என் குரு ஆச்சரியமாக என்னைப்பார்தார்கள் உங்களுக்கு இந்த பழக்கமிருக்கிறதா? நம்பிள்ளைகள் இதுபோன்ற பழக்கங்களில் ஈடுபடமாட்டார்கள் தங்கள் மனதை இதில் லயிக்கசெய்து பாழாக்கிக் கொள்ளவேண்டாம் அதனால் வரக்கூடிய தீமைகளை எடுத்துக் கூறினார்கள்.

அவர்களிடம் என்னைப்பற்றிய குறையை கூறும்போது நான் கூனிக்குறுகி விட்டேன்.
எப்படியாவது விட்டுவிடுகிறேன் என்று நான் கூறினாலும் மனம் சம்மதிக்கவில்லை.

மனிதன் ஏதோ ஒன்றுக்கு கட்டுப்படவேண்டும் அந்தக் கட்டுப்பாடு இல்லை என்றால் நூலறுந்த பட்டத்தைப் போன்று அவனுடைய வாழ்க்கை இருக்கும்.

குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டால் அதனால் வரக்கூடிய நன்மைகள் எனக்குத்தானே இருந்தாலும் ஈகோ சும்மா இருப்பதில்லை மனைவிச் சொல்லி இதை விடவேண்டுமா? அல்லது நீ பெற்ற குழந்தைகள் சொல்லி விடவேண்டுமா? இப்படி விடாமல் புகைத்துக் கொண்டிருப்பதற்கு பல காரணங்களை மனம் கற்பித்தாலும் அறிவு அதை ஏற்றுக் கொள்வதில்லை.

புகைக்கக் கூடியவர்களுக்கு புகைப்பதினால் பல தீமைகள் இருக்கிறது என்பது தெரிந்துதான் இருக்கிறார்கள் ஆனால் அந்த தீமை அவர்களைத் தண்டிக்காத வரையில்.
ஆனால் தண்டிக்கப்படும்போது அதை துண்டித்துவிடுவார்கள் தண்டனைக்காக காத்திருக்க வேண்டுமா?.

ஒரு செயலை தொடரும்போது மனம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை அதை தொடச்சியாக்கும்போது அது பழக்கமாகிறது.அந்த பழக்கம் வழக்கமாகி வாழ்க்கையாகிறது.

இப்படி தொடரப்படுவதுதான் எந்தப்பழக்கமும்.

அந்தப்பழக்கத்திலிருந்து விடுப்பட்டு சரியாக சொல்ல வேண்டுமானால் 2010 ஏப்ரல் 10 தேதி இரவு 9.30 மணிக்கு புகைப்பதை விட்டுவிட்டேன்.50 தினங்களை புகைக்காமல் கடத்தியும் விட்டேன்.வாடை இன்னும் வீசிக்கொண்டு தானிருக்கிறது இருந்தாலும் நான் போராட புறப்பட்டுவிட்டேன்.

புகைப்பதில் நுழைந்த பலர் அதிலிருந்து மீண்டுவருவது கடினம் என்று தங்களுக்குள் ஒரு எண்ணத்தை வழுவாக வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை.
நானும் அப்படிதான் இருந்தேன் எனது குரு கேட்டார்கள் உங்கள் மனதை உங்களால் வெல்ல முடியும் விட்டுப்பாருங்கள் உங்கள் மனோசக்தியை உணர்வீர்கள் என்றார்கள்.

என்மனதை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தூக்கி வீசினேன் இந்த ஐம்பது தினங்களில் அந்த நினைவு வரும்போதெல்லாம் நம் மனதை வெல்லவேண்டும் என்ற எண்ணைத்தை வலுவாக்கிக் கொள்கிறேன் அந்த எண்ணத்திற்கு மத்தியில் இந்த சிகரெட் வலுவிழந்து வருகிறது.

ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீளக்கூடியவர்களின் மனோசக்தி அவர்களுக்கு அதிகரிக்கிறது அவர்களால் எதையும் வைராக்கியத்துடன் செய்து சாதிக்கமுடியும் என்பதை இந்த ஐம்பது தினத்தில் நான் கற்றுக் கொண்டுவரும் அனுபவப்பாடங்கள்.

அந்த பழக்கத்தை விட்டதினால் எனது குடும்பம் சந்தோசமடைகிறது நானும் சந்தோசமடைகிறேன் என்னுள் இருந்த புகைக்கும் எண்ணம் இல்லாதபடியால் அவ்வபோது நண்பர்களைவிட்டு விலகி புகைத்துவிட்டு வரும் அந்த நிமிடங்கள் இன்று மீண்டுருக்கிறது ச கநண்பர்களுக்கு மத்தியில் இன்று நானும் புகைக்காதவனாக காட்சியளிக்கிறேன்.

சாதிக்க முடியும் என்னாலும் சாதிக்க முடியும் ஆம் நான் இமயத்தை தொடவில்லை ஆனால் என்வீட்டு இதயங்களை தொட்டுவிட்டேன்.

மீள்வதற்கு வழிதந்த என்குருவிற்கும் என்குடும்பத்தார்கள் எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.

நண்பர்களே!
உங்களாலும் முடியும் நீங்களும் சாதனையாளர்தான்.. வாழ்த்துக்கள்!

Thursday, April 15, 2010

சந்திச்சாச்சு....அமீரகப்பதிவர்கள்


நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீரகப்பதிவர்கள் சந்திக்கலாம் என ஒரு மனதாக இமெயிலில் முடிவெடுத்தாலும் அதில் உள்குத்து, வெளிகுத்து என்று பல குத்துக்கள் இருந்தது.

அதென்ன இத்தனை குத்துன்னு கேட்கிறீங்களா விசயம் இருக்கு...

கராமா பூங்காவில் இரவு 8.00 மணிக்கு சந்திக்க நாள், நேரம் குறித்தாச்சு. நான் அங்கே செல்லும் போது 8.30 மணி.(நாம எப்போங்க சரியான நேரத்துக்கு போயிருக்கோம்)


பெரிய கூட்டம் இருக்கும்னு கற்பனையில போனே... ஆமாங்க சென்றமுறை குறும்படம் வெளியீட்டோம் இல்லீங்களா... அதை பார்த்துட்டு பலபேர் வலைப்பூ ஆரம்பிச்சதா அரச புரசல கேள்விப்பட்டேன்.அதனால் என்னுடைய எதிர்பார்ப்பு கொஞ்சம் ஏத்தமா இருந்தது.ஆனா அங்க பத்து பன்னிரெண்டு பேர்தான் இருந்தாங்க...

கீழைராஸா பேசிக்கிட்டு இருந்தாரு அவரைச்சுற்றி வட்டமா கொலகொலைக்கா மந்திரிக்கா நரியநரிய சுத்திவா மாதிரி உட்காந்திருந்தாங்க.

ஏற்கனவே பதிவர்களுடன் அறிமுகம் ஆகிவிட்டதினால குசலம் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு.

சென்ஷி பக்கதுல உட்காரச்சொன்னாரு அவரு ஆசைக்கி அங்கேயே உட்காந்தேன்.

அண்ணாச்சிய காணும்மேன்னு கீழைராஸாவிடம் கேட்க அரைமணிநேரத்துல வந்துடுவாருன்னு கூறினார்.சொன்னா மாதிரியே 20 நிமிஷத்துல அண்ணாச்சியும் பெண்பதிவரான ஜெஸிலாவும் வந்தார்கள்.
பதிவர்கள் சங்கம் நாம எப்போது ஆரம்பிப்பது என்று சென்ஷி கேட்க அண்ணாச்சி முறைக்க இப்பவும் இது சங்கம்தான்டோய் தனியா என்னவேண்டிக்கிடக்கு என்றதும்
கீழைராஸா அமீரகத்துல இருக்குற எல்லா சங்கத்துலயேயும் தலைய கொடுத்துட்டு வாலைத் தேடிக்கிட்டிருக்கோம் இதுக்கு மேலயும் சங்கம் தேவையா?ன்னு முற்று புள்ளி வைத்தார்.

வந்தவர்கள்
1.அண்ணாச்சி
2.ஆஸாத்
3.கீழைராஸா
4.செந்தில்வேலன்
5.சுந்தர்
6.சென்ஷி
7.அகமது சுபைர்
8.முத்துக்குமரன்
9.கலையரசன்
10.நாஞ்சில் பிரதாப்
11.முதுவை முகில்
12.ரியாஸ்
13.சபிர்
14.நான்

நிறையப்பேரைக் காணுமேன்னு சுபைர்ரிடம் கேட்டேன்
நல்லா சிரித்துக் கொண்டு பேசியவர் சட்டென முகத்தை மாற்றிக் கொண்டார் காரணம் அப்போது விளங்கவில்லை.ஆனாலும் இந்த சந்திப்புல சுபைர் ரொம்ப சந்தோசமா இருந்தாரு.

அந்த சந்தோசத்துக்கு காரணம் (கடாவை பழிகொடுக்கபோறாங்க) அவருக்கு அடுத்தமாசம் கல்யாணம்.


சில பதிவர்கள் தாயகம் செல்வதனாலயும், பல தமிழ் அமைப்புகளில் விடுமுறை நாட்களில் விழாக்கள் நடத்துவதனாலயும், பதிவர் சந்திப்பு விடுமுறைநாளுக்கு விடுமுறை கொடுத்துவிட்டு இப்படி திடுதிப்புன்னு ஏற்பாடு செய்திருக்காங்கன்னு நெனச்சிங்கன்னா தப்பு தப்பு...
இது விருந்துக்காகவே கூடிய சந்திப்புன்னு நான் இங்க எழுதல...அதனாலதான் உள்குத்து வெளிகுத்துன்னு சொன்னேன்.


ஆமாங்க... சுபைரும் செந்தில்வேலனும் வந்தவர்களுக்கு மட்டும் ட்ரீட்டு வச்சாங்க.அதனால தான் என்னப் பார்த்து முறைச்சாரு.எல்லா பதிவரும் வந்து கலந்திருந்தா அனேகமா சுபைர் வந்திருக்க மாட்டாருன்னு குசும்பன் சொல்வது காதில் விழுகிறது.

சுபைரு ட்ரீட்டு கொடுத்தது தான் பழியாவதற்கு

செந்தில்வேலன் கொடுத்தது தான் பழியாகி பழிவாங்க வந்தவருக்கு (குழந்தை பிறந்ததற்காக) கொடுத்தாரு...


அண்ணாச்சி நல்ல உணவகமாக பார்த்து அழைச்சுட்டுப் போவதற்கு முன்னாடியே ஜெஸிலா கிளம்பிட்டாங்க சுபைருக்கு ரொம்ப சந்தோசம் ஒரு தல குறைஞ்சுடுச்சு.

கொஞ்ச தூரம் நடப்பாட்டியே அண்ணாச்சி அழைச்சுக்கிட்டு போனதின் இரகசியம் நல்லா சாப்பிடுவோம்னு மட்டுமல்ல தரமான உணவகத்தை தேர்தெடுப்பதற்கு என்று சாப்பிட்ட போது விளங்கிக்கிட்டோம்.
சுpக்கன் மட்டன் பிரியாணி சிக்கன் கபாப் சிக்கன்65 சிக்கன் டிக்கா இப்படி சிக்கு சிக்குன்னு பல ஐட்டங்கள்
(பதிவர் சந்திப்புக்கு வராத அமீரகப் பதிவர்களே வயிற்றெரிச்சல் படவேண்டாம். சுபைரு கல்யாண முடிச்சதும் இன்னொரு விருந்தும் கொடுப்பாரு)

எல்லாம் முடிஞ்சு வெளியில வந்தோம் ... ஒரு நிமிசம் என்று கூறி சுபைர் பாத்ரூம் போனாரு போய் ரொம்ப நேரமாச்சு ஆளைக் காணும்.

சுபைரிடம் ஏம்பா இவ்வளவு நேரம் என்று கேட்க
உடனே முகில் பாத்ரூமில் அழுதுவிட்டு வராரு...என்று கூறி புன்னகையுடன் எல்லோரும் விடைபெறுவதற்கு முன்

உதவிக்கரம் நீட்டியவருக்கு மருத்துவ உதவிக்காக அண்ணாச்சி பண்ட் கலெக்ட் செய்தார்.பலரும் பங்கெடுத்தோம்.

கடைசியா ஒருவார்த்தை கீழைராஸா சொன்னார்

இந்த நிகழ்ச்சிய யாரும் பதிவிடவேண்டாம்ன்னார்.அவரு சொன்னதை எல்லாரிடமும் சொல்லனுங்குறதுனால தான் இந்த பதிவு.


மொத்தத்துல கூட்டம் குறைவா இருந்ததுனால மொக்கையும் குறைவா இருந்துச்சு...வராத பதிவர்களை நினைத்து சுபைருக்கு சந்தோசம் எங்களுக்கு வருத்தம்.

Wednesday, April 14, 2010

பூஜியமாகும் சூனியம்


சில தினங்களுக்கு முன் எனது ஆன்மீக ஆசிரியரின் சொற்பொழிவைக் கேட்க சென்றிருந்தேன்.
ஆண்டுக்கு ஒருமுறை பத்து அல்லது பதினைந்து தினங்களுக்கு துபாயில் சொற்பொழிவாற்றுவார்கள்.

பலதரபட்ட கேள்விகள் பலரும் கேட்பார்கள்.எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும்.ஆனால் கேட்கப்படும் கேள்வியை விளங்கி கேட்கப்படும்போது அதற்கான பதிலும் நம் மனதில் பதியும் இருள் விலகி அறிவுத் தெளியும்.
எல்லோரும் கேட்கிறார்கள் என்று நாமும் எதையாவது கேட்டால் பதில் கிடைக்கும் ஆனால் அந்த பதில் நம் மனதில் தரிபடாது.

ஏத்தனையோ நூற்களை நாம் வாசிக்கின்றோம் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு நூலும் ஒரு அறிவுதான்.ஆனால் அந்த நூற்கள் அறிவின் பூரணத்தை விளக்குவதில்லை.ஏட்டுக்கல்வியினால் எல்லாவற்றையும் விளக்க முடியாது.
விளக்கம் கொடுப்பதற்கு ஒரு ஆசான் தேவை.விளக்கமில்லாத படிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

ஞானிகளிடம் பூரணத்தை கேட்டு தெளியலாம்.கேட்கப்படும் நம்மிடம் தேடல் இருக்கவேண்டும்.இல்லையெனில் எந்த பதிலும் நம்மை திருப்தி படுத்தாது.
எல்லாவற்றிகும் ஒரு வழி இருக்கிறது.அந்த வழியில் தான் எதையும் பெறவேண்டும்.வழிமாறினால் வாழ்க்கையும் மாறிவிடும் சிந்தனையும் மாறிவிடும்.

இது அவசரக்காலம் எதையும் அவசரமாக செய்யப் பழகுகிறோம்.இந்த அவசரம் மனிதனை போட்டி மனப்பான்மையை உண்டாக்கி பொறாமைகளை வளர்த்து வருகிறது.

இந்த பொறாமை ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அழிப்பதற்கும் அவனைக் கெடுப்பதற்கும் பல யுக்திகளை கையாளுகிறான்.
அப்படிப்பட்ட யுக்திகளில் ஒன்று தான் செய்வினை செய்வதும் சூனியம் வைப்பதும்.இதில் பெரும்பாலும் பெண்கள் கவரப்படுகிறார்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

உண்மையில் ஒரு மனிதனுக்கு சூனியமோ செய்வினையோ செய்யமுடியுமா? அப்படி செய்வதினால் அதில் மனிதன் பாதிக்கப்படுகிறானா?

இந்த கேள்விகள் என் ஆன்மீக ஆசிரியரிடம் கேட்கப்பட்டது.

ஒரு கதை மூலம் விளக்கம் அளித்தார்கள்.

ஒரு சாலை ஓரத்தில் இருவர் எதிர் எதிரே ஒரேவிதமான கடை வைத்திருந்தார்கள்.ஒருவருக்கு நல்லவியாபாரம் அவர் நியாயமான விலையில் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.மற்றவருக்கோ அந்தளவு வியாபாரமில்லை.எதிர் கடைக்காரனைக் கண்டு அவர் பொறாமைக் கொண்டார்.

ஒரு நாள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.உன்னை என்ன செய்கிறேன் பார் உனக்கு சூனியம் வைக்கிறேன் என்று வியாபாரம் இல்லதவர் கூற உன்னால் முடிந்ததை செய் என்றார் நியாயக் கடைக்காரர்.

மறுதினம் காலையில் கடைத் திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி.அவர் கடை வாசலில் கருப்பாக மணி உதிர்ந்து கிடைப்பதைப் போல கடுகு கிடைப்பதைக் கண்டதும் பொறாமை கடைக்காரர் ஏதோ சூனியம் செய்வினை வைத்துவிட்டார் என்று இவரே ஒரு பிரம்மையை ஏற்படுத்திக் கொண்டு கவலையடைந்தார்.அந்த கவலை வியாபார சிந்தனையிலிருந்து அவரை திசைத்திருப்பியது.அவருக்கு வியாபாரம் மந்தமானது அவர் உடல் நிலையும் மோசமானது.

இவரின் நண்பர் இவரைக்காண வந்தபோது தனக்கும் தனது எதிரி கடைக்காரனுக்கும் நடந்த பிரச்சனையை கூறி அவர்தான் எனக்கு செய்வினை செய்துவிட்டார்.என்னுடைய வியாபாரமும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்று அவர் கூறியதும் அந்த நண்பர் கூறினார்
உன்னுடைய எதிரையை பார்த்துவிட்டுதான் உன்னைக்காண வந்துள்ளேன்.
அவர் உனக்கு செய்வினையோ சூனியமோ வைக்கவில்லை. ஆனால் ஒரு ஐம்பது கிராம் கடுகை மட்டும் உன் கடை வாசலில் கொட்டிஇருக்கிறார் அதைக்கண்ட உனக்கு பயம் உண்டாகி நீயே உனக்கு சூனியத்தை செய்வினையை வைத்துக் கொண்டுள்ளாய் என்றார்.
இப்படித்தான் பலர் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.என்ற கதையை ஆன்மீக ஆசிரியர் கூறினார்கள்.

பல பெண்களிடம் சூனியத்தின் நம்பிக்கை நிறைந்திருக்கிறது.எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள்.சூனியம் என்றாலே ஒன்றும் இல்லை என்பதுதானே பொருள்.ஒன்றுமில்லத ஒன்றினால் என்ன செய்ய முடியும். ஆனால் நம்பிக்கை எதையும் செய்யும்.
இறைவன் ஆதியில் சூனியமாக இருந்ததை அமாவாக இருந்தேன் என்கிறான்.ஒன்றுமில்லா ஒன்றுதான் இந்த பிரபஞ்சமாக இருக்கிறது.

செய் என்றால் செயல்பாடு
வினை என்றாலும் செயல்பாடுதான்; செய்வினை என்ற சொற்சொடருக்கு செயல் என்பதுதான் பொருளாக இருக்கிறது.

செய்வினை சூனியம் என்பது மனிதர்களை முட்டாளாக்குவதற்கும் பொருளை அபகரிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்று கண்கட்டு வித்தை.
சூனியம் மூலம் ஒருவரை பழிவாங்க முடியுமென்றால் நம்நாட்டு அரசியல்வாதிகளை எண்ணிப்பாருங்கள்.
சூனியம் வைத்தே ஒட்டையும் ஆட்சியையும் பிடித்துவிடுவார்கள் எதிர்கட்சி என்பதே இல்லாமலாகிவிடும்.எதிர்ப்பனுக்கெல்லாம் சூனியம்தான்.
இது சாத்தியமா?

சில இல்லங்களில் மாமியார் மருமகள் பிரச்சனை கூட சூனியம் என்ற பாட்டையில்தான் நடைப்பெறுகிறது.

இந்த நம்பிக்கையை பேணக்கூடியவர்களுக்கு சூனியம் எல்லாமும் செய்யும் இதை ஏற்காதவர்களுக்கு சூனியம் தனக்கே சூனியமாக்கிக் கொள்ளும்.

நம்பிக்கை என்பது மனிதன் தெளிவுவடைவதற்குதானே தவிர மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கல்ல.!

Tuesday, March 23, 2010

போலி மனிதர்களும், போலி மருந்துகளும்


இன்றைய நவீன உலகில் சம்பாத்தியம் என்பது போட்டிகளாக மக்கள் மனதில் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

சம்பாத்தியம் என்பது வாழ்வதற்கு அவசியமான அத்தியவாசயமான ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் எப்படி சம்பாதிக்கிறோம் என்பதில் பலவித கருத்துக்கள் இருக்கிறது என்றாலும் சம்பாத்தியத்தில் நேர்மை என்பது ஒவ்வொருவரும் பேனவேண்டியது அவசியமான ஒன்று என்பது பொதுவிதி.

நாம் எப்படி சம்பாதிக்கிறோம் என்பது அவரவருக்கு மட்டுமே தெரிந்த இரசியமாக இருக்கிறது.

ஒருமனிதனுடைய இரகசியமான செயல்கள் பகிரங்கமாகும்போது மற்றவர்களுக்கு மத்தியில் அவன் பொதுவிதியை நேர்மையை மீறியவனாக காட்சி அளிக்கிறான். பலருடைய விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுகிறான்.
இந்த விமர்சனங்கள் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருப்பதற்கும் தவறிலிருந்து திருந்துவதற்கும் வாய்ப்பை கொடுக்கிறது.ஆனால் தவறு செய்யக் கூடியவர்கள் அதை தவறு என்று உணரும்பட்சத்தில் மட்டுமே அந்த தவறு களையப்படும்.



நாட்டின் சட்டம் கடுமையாக தண்டிக்கப்படக் கூடியதாக இருந்தால் தவறுகளிலிருந்து மனிதர்களை குறைக்கலாம்.ஆனால் சட்டம் படித்தவர்களே குற்றவாளிகளை நிரபராதி என்று வாதாடி தங்களின் பொருளீட்டை பெருக்குவதற்கு சட்டத்தை ஏமாற்றுகிறார்கள்.

கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் யாரை எப்படி ஏமாற்றலாம் என்று இன்றைய நவீன உலகம் ஆசைகளை தூண்டி பலரையும் யோசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தனிமனித நேர்மை மனிதர்களிடம் இல்லாதவரையில் ஏமாறவும் ஏமாற்றவும் செய்வார்கள் என்பது திண்ணம்.

தெருவுக்கு ஒரு ஆலயம் வீட்டுக்குள் வணக்க வழிபாடு இப்படி பரவிவரும் பக்தி நிலையில் இறையை தொழுகின்ற மனிதர்கள் அந்த இறையிடம் பொருளைத்தான் வேண்டுகிறார்களேலொழிய நேர்மையை வேண்டுவதில்லை.

ஓவ்வொரு மனிதனும் ஒரே உண்மையிலிருந்து வெளிப்பட்டவன் தான் என்பதை வேதப்படிப்போடு நிறுத்திக் கொள்வதால் அனுவபப் படிப்பில் ஏமாற்றவும் ஏமாறவும் செய்கிறார்கள்.

சமீபத்தில் காலவாதியான மருந்துகளை போலி முத்திரையுடன் மீண்டும் மக்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்றச் செய்தி பலரையும் அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது.

யாரோ ஒருவர் இந்த மருந்தை வாங்கி அவதிப்படுவதைப் பற்றி அதை விற்ககூடியவனுக்கு துளியும் கவலையில்லை.அவனுக்கு தேவை பணம் மட்டும்தான். இப்படி பணத்தின் மீது குறியாய் இருப்பவர்களுக்கு நேர்மை என்பதோ ஒழுக்கம் என்பதோ துளியும் இல்லை என்றுதான் கூறவேண்டும். பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.மனித உயிர்களை விட பணம் மதிப்பு வாய்ந்ததாக பலரின் மனதிலும் குடிக் கொண்டுள்ளதால் தவறுகள் எளிமையாக நடந்துக் கொண்டிருக்கிறது.இந்த சமூகமும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

காலாவாதியான மருந்துக்களை விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் கால தண்டனை வழங்க சட்டம் கொண்டு வரப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சட்டம் வருவதற்குள் எத்தனை உயிர்கள் பறிப்போகும் என்பது யாருக்குத் தெரியும்.

கல்வித்துறையும் வியாபாரமாகிவிட்டது அதில் பயிலும் மாணவர்களும் வியாரா நோக்கிலேதான் பயின்றுக் கொண்டிருக்கிறார்கள்.நாளை இவர்களின் எதிர்காலம் மனித நேயத்தைவிட வியாபாரநேயமே அதிகரிக்கும்.

எதையுமே லாபநோக்கில் பார்க்க கூடிய மனோநிலையை இந்த சமூகம் உருவாக்கிவருகிறது. இந்த நிலை மாறாத வரையில் எல்லாப் பொருள்களிலும் எல்லா மனங்களிலும் கலப்படம் இருக்கத்தான் செய்யும்.

மனிதநேயத்தை பயிற்றுவிக்கக் கூடியவர்களும், பயில்கிறன்றவர்களும், அதைப் பேணுகின்றவர்களும் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இது அதிகமாகத வரையில் பல திடுக்கிடும் செய்திகளை தினசரிகளில் தினம் கண்டுக் கொண்டுதானிருப்போம்.

Saturday, March 20, 2010

மார்ச் 20


1988 மார்ச் 20 லிருந்து 2010 மார்ச் 20 வரையில் சுமார் 22 வருடங்கள் கழிந்திருந்தாலும் எங்களுடைய வாழ்க்கையில் கூட்டல்களை வகுத்தல்களை கணக்கியலை திருமண பந்தம் கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆம் இன்று நான் எனது மனைவி பிள்ளைகளுடன் திருமணநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

எனது இருமகள்களும் அலுவலகத்திற்கு தொலைப்பேசி செய்து என்னிடம் வாழ்த்துக்களை வழங்கினார்கள்.

எங்களின் 22 வருட வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் நிறைய இருந்தாலும் அவை இனிப்பு, கசப்பு, காரம், புளிப்பு இப்படி எல்லாம் கலந்த மசாலாவாக இருந்துக் கொண்டிருக்கிறது.

உணவுக்கு மசாலா எவ்வளவு அவசியம் என்பது உங்களுக்கும் தெரியும்தானே. அதில் எந்த ஒன்றும் அதிகமானாலும் ருசி மாறிப்போகும்.ருசி மாறினால் பசி தீராதே. பசிக்காக ருசியே இல்லாமல் என்றோ ஒரு நாள் சாப்பிடலாம் தினம் சாப்பிட முடியுமா?தினம் ருசியில்லாமல் சமைக்கத்தான் முடியுமா? காலம் கற்றுக் கொடுத்துவிடும். வாழ்க்கையும் அப்படித்தான் கற்றுக் கொடுக்கிறது விட்டுக் கொடுக்கும் பட்சத்தில்.

எங்கள் வாழ்க்கையை கற்றுக் கொண்டுவாழ்கிறோம், நிறைய எங்களுக்குள் விட்டுக் கொடுத்தும் வாழ்கிறோம்.

மாப்பிள்ளை ஊர்வலத்தில் மாலையும் கழுத்துமாய் அம்பாஸிட்டரில் அமர்ந்திருந்தபோது என் உறவினர் தேரிழந்தூர் அப்துல் மஜீது அவர்கள் என்னிடம் உதிர்த்த வார்த்தைகள் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

நேற்று வரையில் நீ அரை மனிதன் இன்று முதல் நீ முழு மனிதன் என்றார்.

திருமணம் பந்தத்தின் மூலம் மனிதன் முழு மனிதனாகின்றான்.அதுவரையில் என்னதான் கற்றறிந்தாலும் அந்த மனிதன் முழுமை அடைவதில்லை.

அன்று எங்கள் திருமணத்தில் கலந்துக் கொண்ட பலரை இன்று நாங்கள் இழந்திருக்கிறோம். வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் இருக்கத்தானே செய்கிறது.

எப்படி பிறந்தோம் என்றறிந்தால் எப்படி வாழ்வது என்பதறிவோம் என்ற வரிகளை இங்கு பதிவு செய்ய எனது 22 வருட மணவியல் வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது.

திருமணமான சில நாட்களில் மகானைக் காண நான் சென்றபோது எனது தாயார் வருந்தினார்கள். இந்த வயசுல எதுக்கு இதுவெல்லாம் என்றார்கள்.

அறிவைத்தேட வயதிருக்கிறதா? புரிந்துக் கொள்வதற்குத்தான் வயது தேவைப்படுகிறது.

அந்த தருணத்தில் எனது மனைவி பயந்திருக்கிறாள். பயத்தை போக்குவதற்கு தெளிவைக் கொடுத்தேன்.

புரிந்துக் கொண்டார் எனக்கு என் மனைவி புதியவரல்ல. மணம் புரிந்தப்பின் என் மனதில் புகுந்தவரல்ல. என் தந்தையின் சகோதரி மகள் என்றாலும் கூட இரு மனம் கலந்தால்தான் அது காதல். ஆனால் அந்தக் காதல் சில வருடங்கள் வாழ்க்கை ஒப்பந்தத்திற்காக காத்திருந்தது.

காலம் கடந்தது எங்கள் காதல் வளர்ந்தது. என் வீட்டில் எதிர்ப்பு நிறைந்தாலும் என் தந்தை மறுப்பு சொல்லவில்லை எங்களுக்காக விட்டுக் கொடுத்தார். அதுதான் எங்களுக்குப் பாடம்.

விட்டுக்கொடுத்தால் விரோதியும் நமக்கு நண்பனாகி விடுவான். விரோதியே நண்பனாகும்போது நமக்கே நமக்காக வாழும் நாம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துவிட்டால்..... எழுதுவதற்கு எளிமையாக இருக்கிறது படிப்பதற்கும் அப்படித்தானிருக்கும் நடைமுறைப் படுத்தி வாழ்ந்துப் பார்த்தால் கடினம்மாதிரி இருந்தாலும் அது கஸ்டமாவதில்லை நம் வாழ்க்கையை நஷ்டமாக்குவதில்லை.

எங்கள் திருமணத்திற்கு பாலமாக நின்ற என் இனிய நண்பர் ஒலிமுஹம்மது.இவர் எங்கள் இரு வீட்டாருக்கும் தூதுச் சென்ற வெள்ளைப் புறா மறக்க முடியாத மனம்.

திருமணத்தை முன்னின்று நடத்திய என் அன்பிற்குரிய மாமா அப்துல்ஜப்பார்.என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த மாவீரர்.

என் பிள்ளை ஆசைப்பட்டு விட்டான் என்பதற்காக என்னவளை மருமகளாய் ஏற்றுக் கொண்ட என் அன்னை.

என்றும் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் என் தந்தை.

ஓடியாடி வேலைகளை செய்த என் உடன் பிறந்த சகோதரர்கள்.

பெற்ற பிள்ளையைப்போல் பாசங்காட்டிய என்நண்பன் அத்திக்கடை சிஹாபுதீனின் தந்தை செவத்தப்பிள்ளை முஹம்மது ஹனிபா.

எங்களை வாழ்த்துவதற்காக கூடிவந்த சொந்தங்கள், பந்தங்கள், உள்ளுர் வாசிகள்

இவர்களுக்கு மத்தியில் காதலுக்கு தூதுச் சென்ற எனது மைத்துனர் ஷேக்அலாவுதீன்.

நாங்கள் யாரையும் மறக்கவில்லை எங்கள் மனதில் மறைக்கவில்லை.

Thursday, March 11, 2010

விமானத்தில் ஒரு விவாதம்

சென்ற மாதம் எனது நண்பர்களுடன் துபாயிலிருந்து இலங்கைக்கு ஒரு விழாவிற்காக சென்றிருந்தேன்.

பல நாடுகளிலிருந்து பலரும் இவ்விழாவிற்காக வருகைத்தந்தார்கள்.

சார்ஜாவிலிருந்து எங்களது பயணம் ஏர் அரேபியாவில் தொடங்கியது.

நண்பர்களுடன் ஒருமித்து பயணம் செய்வது என்பது அலாதியான இன்பம்.

ஏர்அரேபியா விமானத்தில் இருக்கைகளில் நண்பர்களுடன் ஒன்றாக அமர்வதற்கு எண் கிடைக்கவில்லை.நான் மட்டும் தனித்து சகபிரயாணிகளுடன் அமரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இரவு நேரப் பயணம் என்பதால் அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.மூன்று பேர்கள் அமரக்கூடிய இருக்கையில் எனக்கு நடு இருக்கை அமலாகி இருந்தது.

எனது இருக்கையின் இடது பக்கம் இலங்கைவாசி அமர்ந்திருந்தார்.அவர் என்னிடம் பேசவில்லை நானும் பேசவில்லை.அவரவர் எண்ண ஓட்டத்தில் கற்பனையில் சிந்தனையில் ஓத்திகைகளை மனதில் காட்சிகளாக்கி படம் பார்த்துக் கொண்டிருந்திருப்போம்.

எனது வலதுப் பக்க இருக்கைக்கு தாடிவைத்த ஐம்பது வயதை கடந்தவர் வந்தமர்ந்தார்.அவர் தோற்றத்தை வைத்து இஸ்லாமியர் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

மதத்தை அல்லது மார்க்கத்தை முழுமையாக பேணுகிறார்களோ இல்லையோ ஆடைகளில் தங்களை எந்தக் கொள்கையை எதைச் சார்ந்தவர்கள் என்பதை அடையாளம் காட்டிக் கொள்ளக்கூடியவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

அவர் என்னைக்கண்டு புன்முறுவல் பூத்தார். தன் பெயரைச் சொன்னார் என் பெயரைச் சொன்னேன்.

என்னிடம் கைகுலுக்கிக் கொண்டார் இந்த பரசஸ்பரம் நானும் இஸ்லாமியன் என்பதினால் அவரிடம் ஏற்பட்ட உந்தலாக இருந்தது.

இந்தியன் என்றார் நானும் என்றேன்.


அதோடு அவர் இருந்துவிட வில்லை.கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தார்.எங்கு போகிறீர்கள் எதற்கு போகிறீர்கள் ஏன் போகிறீர்கள் என்று துப்பறியும் காவலரைப்போல அவர் கேட்டது எனக்கு ஒருவித சலிப்பை கொடுத்தது.இருந்தாலும் பதில் கொடுத்தேன்.

விமானம் பறக்க ஆரம்பித்தது தன்னிடம் ஹைதராபாத் பிரியாணி அதிகமாகவே இருக்கிறது என்னோடு பங்கு போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

நன்றி... நான் சாப்பிட்டுவிட்டேன் என்றேன்.மீண்டும் அழைத்தார் மீண்டும் நன்றி சொன்னேன்.ஹைதராபாத் பிரியாணி ருசியாக இருக்கும் மிஸ் பண்ணாதீங்க என்றார்.

(உணவு ருசியாகத்தான் இருக்கும் உண்ணக்கூடிய நாம் ருசியாக இருக்கின்றோமா? என் உள்மனம் கேட்டது)

அவர் உண்பதற்கு ஆயத்தமானார் நான் எனது நண்பர்களின் இருக்கையைத் தேடி சென்றேன்.சிலர் உறக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்கள் உரையாடிவிட்டு எனது இருக்கைக்கு வந்தேன்.

பிரியாணியை முடித்துவிட்டு எனக்காகவே காத்திருப்பது போல் அமர்ந்திருந்தார்.
நான் அமர்ந்ததும் பேச்சை ஆரம்பித்தார்.

பொதுவான பேச்சல்ல.இறைவனைப் பற்றிய உரையாடல்.அவர் பேச பேச நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் இஸ்லாமியனாக இருப்பதினால் இவர் பேசுகிறாரா அல்லது இந்த இருக்கையில் வேறு யார் அமர்ந்திருந்தாலும் இவர் இப்படித்தான் பேசிக் கொண்டிருந்திருப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

பலரிடம் இறைவனைப்பற்றிய அறிவைவிட நம்பிக்கையே அதிகமாக இருக்கிறது.
தன் நம்பிக்கையை எப்படியாவது மற்றவர்களிடம் காட்டிவிட வேண்டும் என்பதில் பலர் ஆவர்வமாக இருக்கிறார்கள்.

ரொம்பவும் சுவாரஸ்யமாக பேசினார்.என்னிடம் தான் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது.அவர் பேசிய பகுதிகளை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் அதனாலும் கூட சுவாரஸ்யம் குறைந்திருக்கலாம்.

இவர் தனக்கு இதுவெல்லாம் தெரியும் என்று பேசினாரா அல்லது எனக்கு இவைகள் தெரியாது என்று பேசினாரா? ஏன்று விளங்கவில்லை.ஆனால் ஒன்று மட்டும் விளங்கியது சரியா இவரிடம் மாட்டிக் கொண்டோம் என்று.

இவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரே வழி நான் வாயை திறக்கனும் என்று முடிவு செய்தேன்.வாய்ப்பை எதிர்பார்த்தேன் அவர் பேச்சில் ஒரு சிறிய இடைவேளை கிடைத்தது உள்ளே புகுந்தேன்.

இறைவனைப்பற்றி நிறையவே பேசினீர்கள் உங்களிடம் இறை நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது சந்தோசம்.
இறைவனை நம்ப வேண்டுமா அறிய வேண்டுமா? முதல் கேள்வியை வைத்தேன்.
அவர் மௌனமாகவே என்னைப்பார்த்தார்.மீண்டும் தொடர்ந்தேன் இந்த உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் மட்டுமே இருந்ததாக வேதம் கூறுகிறது.
ஓன்றை படைக்க எண்ணினால் ஆகுக என்று இறைவன் கூறுவான் அது ஆகிவிடும் என்று வேதம் சொல்கிறது அப்படியான படைப்பில் இறைத் தன்மை இருக்கிறதா?இல்லையா? என்று கேட்டேன்.

மௌனமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மன்னிச்சுடுங்க! நம்மைப்போன்ற பலரிடம் இஸ்லாமிய வெளிரங்க ஞானம் அதிகமாக இருக்கிறதே தவிர உள்ரங்க ஞானம் இல்லை.இஸ்லாம் ஒரு பகுதி அல்ல அது முழுமையானது.இஸ்லாம் தர்க்கத்திற்குரியது அல்ல வாழ்வதற்குரியது ஆனால் அதை தர்க்கதிற்குக்கென்று பலரும் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு இஸ்லாமியன் தன்னை அறியப்படும்போது தன் இறைவனை அறிகிறான்
இறைவன் மீது நம்பிக்கை மட்டும் வைத்திருப்பவர்கள் தன்னை அறிவதில்லை.அவர்கள் இறைவனை தன்னை விட்டும் பாரதூரத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்று கூறி முடித்தேன்.

மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் மதங்களும் மார்க்கமும் ஆனால் நாம் அதிகமாக இறைவனைப்பற்றி பேசுகிறோம் அதிகமாக மனிதர்களை நேசிக்கின்றோமா?

சரிதான் சரிதான் என்று மெல்ல இந்த வாதத்திலிருந்து விலகுவதைப் போல தனதிருக்கையில் சாவசமாக சாய்ந்தார்.

அப்பாடா தப்பித்தோம் என நானும் இருக்கையை சாய்த்துக் கொண்டு கண்களை மூடினேன்.

இலங்கை போய் சேரும் வரை அவரும் நானும் எதுவும் பேசவில்லை.இறங்குவதற்கு முன் இருவரும் கைக் குலுக்கி விடைப் பெற்றோம்.

இந்த பதிவு விவாதத்திற்காக அல்ல

Thursday, March 4, 2010

காவிக்குள் காமம்

காவி உடைக்குள் காமம் இல்லை என்று யார் சொன்னது.?
பச்சைக்காயில் பழத்தின் ருசி இருக்காது பழத்தில் பச்சைக்காயின் வீரியம் இருக்காது.

காய்களை வாங்கிவிட்டு பழம் என்று சொன்னால் அது யார் தவறு.?

பூத்து காயாகி கனிவதற்கு முன் காய் தன்னை கனி என்று எண்ணிக் கொண்டால் அது பழமாகி விடுமா.?

இரு தினங்களாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுவது காவிக்குள் நுழைந்த காமம்.

மனிதனாக பிறந்த மனிதன் வேதங்களை கற்று மனனம் செய்து அதை பிறருக்கு உபந்நியாசம் செய்துவிட்டால் சமூகத்தில் பலரால் அவர்களை மகானாக பார்ப்பதற்கு பட்டங்களை வழங்குவதற்கும் தயாராகிவிடுகிறார்கள்.
தங்களின் தேவைகளை குறை நிறைகளை அவர்களிடம் கூறி மனஆறுதலை தேடுகிறார்கள்.

மனித உடலுக்கு எல்லாத் தேவைகளும் தேவையாக இருக்கிறது.அந்த தேவைகளை பூர்த்திச் செய்யாமல் வாழ்ந்து வெற்றி பெற்றவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை.

பசிக்கின்றபோது புசிக்கவேண்டும் புசித்துவிட்டால் வயிற்று பசி அடங்கி காமப்பசி தலைத்தூக்கும்.தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி என்ற அந்தஸ்துடன் வாழ்க்கைநெறியை பேணவேண்டும்.அதை அணைப்போட்டு தடுப்பது என்பது தற்கால சாத்தியம் என்றாலும் அது நிரந்தரம் அல்ல.அணைக்குப் பின்னால் தேக்கம் இருந்துக் கொண்டுதானிருக்கும்.
மனிதனை கடவுளாக பார்க்கும் தன்மை மிருகங்களுக்கு கிடையாது ஆனால் மிருகமாக நடக்கும் தன்மையும் கடவுளாக பார்க்கும் பார்வையும் மனிதனிடம்தான் இருக்கிறது.

கடவுளை ஒவ்வொரு மனிதனும் ஒரு அளவுகோள்வைத்து நம்பிக் கொண்டிருக்கின்றான்.இறைவனை அறிபவர்களைவிட நம்புகின்றவர்களே இவ்வுலகில் அதிகம்.நம்பிக்கை அறிவாகுவதில்லை ஆனால் அறிவு நம்பிக்கையை வழுப்படுத்தும்.

இறைவனை இறைவனாக பார்ப்பவர்கள் இவ்வுலகில் மிகச் சொற்பபேர்கள்தான்.
பலர் தன்னை கடவுளாக எண்ணிக் கொண்டு பிறரை எண்ணவைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தன்னை அறியாத இவர்கள் தன்னை கடவுள் என்று சொல்லி இந்த உலகில் எதைப் படைத்தார்கள்.?

பல ஊர்களில் நாடுகளில் ஆசிரமங்களை வளர்தார்கள்.தங்களின் வங்கி கணக்கில் கோடிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உடல் நோய்களை குணப்படுத்த மருத்துவரிடம் செல்லக் கூடியவர்கள் மருத்துவரை கடவுளாகப் பார்ப்பதில்லை.அதில் தெளிவாக இருக்கிறார்கள்.
ஆனால் காவியை கண்டுவிட்டால் பலருடைய கண்களுக்கு சாமியாகத் தெரிவதுதான் வியப்பு.

அந்த சாமிகள் தானும் ஆசாமிதான் என்பதை அவ்வபோது நிருபிக்கும்போது அவரை வணங்கியவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

தான் தவறு செய்யலாம் ஆனால் தான் வணங்கக்கூடியவர் எந்தவிதத்திலும் தவறிழைப்பதை பொருந்திக் கொள்ளமுடியாது என்பதை ஆசிரமங்கள் அடித்து நொருக்கப்பட்டதில் தெரிகிறது.

இவர் தவறு செய்ததற்கு அவரை வணங்கியர்களும் அவரை வளர்த்தவர்களும்தான் காரணம்.

நேற்றுவரையில் ஊடகங்கள் அவருக்கு குடைப்பிடித்து அவருடைய சொற்பொழிவுகளை தொடராக பலரை தொடவைத்தது.
இன்று அதே ஊடகம் அவரை கூவமாக்குகிறது.

ஒரு போலி வளர்வதற்கு காரணமாக இருந்த ஊடகங்களை ஏன் இந்த மக்கள் முற்றுகை இடுவதில்லை.?

ஆறறிவுள்ள மனிதன் தனது ஆறாம் அறிவை பிரயோகிக்காத வரையில் இது போன்ற நிகழ்வுகளை அவன் சந்தித்துக் கொண்டுதானிருப்பான்.

ஒரு பொருளை வாங்கக்கூடியவர்கள் அந்த பொருளின் தரம் மணம் நிறம் இவைகளை அலசி ஆராய்ந்து வாங்குவதில் கவனமாக இருக்கிறார்கள்.
தங்களின் குழந்தைகளை எந்தப்பள்ளியில் எந்த கல்லூரியில் எந்த படிப்பில் சேர்ப்பது படிக்கவைப்பது என்று ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்.
ஆனால் இறைவனுடைய விசயத்தில் அறிவைவிட நம்பிக்கைக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் எளிதாக ஏமாந்துவிடுகிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களால் உண்மையான மகானும் உண்மையான ஞானமும் மக்களிடம் சென்றடைவதில் சுனக்கம் ஏற்படுகிறது.
மனிதனை மனிதனாக வாழவைத்தவர்கள் மற்றவர்களுக்கு மத்தியில் மனிதனாக வாழ்ந்ததாகத்தான் சரித்திரம் சொல்கிறது அவர்கள் கடவுளாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

திரைப்படங்களை கண்டுவிட்டு தங்களின் நாட்டையே தாரைவார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விசயமல்ல.

இதுவும் கடந்து போகும்.!